கோயம்புத்தூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய தொடர் காத்திருப்பு போராட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர். அதன்படி கோவை மாவட்டம் சார்பில் காத்திருப்பு போராட்டம் செவ்வாய்கிழமை(ஏப்ரல் 25) துவங்கியது.
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு சங்கத்தின் மாவட்ட தலைவர் சாந்தி தலைமையில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த காத்திருப்பு போராட்டத்தில் 10 குழந்தைகளுக்கும் குறைவாக இருக்கும் பிரதான மையங்களை மினி மையங்கள் ஆக்குவது, ஐந்து குழந்தைகளுக்கும் குறைவாக இருக்கும் மினி மையங்களை பிரதான மையத்தோடு இணைக்கும் திட்டத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
மேலும், புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கிட வேண்டும், உள்ளூர் பணியிட மாறுதல் வழங்கிட வேண்டும், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும், கோடை காலத்தை கருத்தில் கொண்டு பள்ளி, கல்லூரிகளுக்கு கோடை விடுமுறை விடுவது போல் அங்கன்வாடி மையங்களுக்கும் ஒரு மாத கால விடுமுறை விட வேண்டும், அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பு ஒரு வருடம் வழங்குவது போல் அங்கன்வாடி ஊழியருக்கும் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தை அடுத்து ஆட்சியர் அலுவலகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.