கோயம்புத்தூர், சிவானந்தகாலனி பகுதியில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், அமமுக, கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக வாக்கு சேகரிப்பில் ஈடுப்ட்டார். அப்போது அவர் பேசுகையில், ”கொங்கு மண்டல மக்கள் நம்பிக்கை துரோகத்தை அனுமதிக்க மாட்டீர்கள் என்று தெரியும். இன்றைக்கு ஆளும் கட்சியின் கூட்டணி, துரோகக் கூட்டணியாக உள்ளது. இவர்களையும், புரட்சித் தலைவரால் ’தீய சக்தி’ என்று அழைக்கப்பட்ட திமுக கூட்டணி இரண்டையும் ஓடவிட வேண்டும்.
முதியோர் உதவித் தொகையைக்கூட முறையாக கொடுக்க முடியாத எடப்பாடி பழனிசாமியால், எப்படி வீட்டிற்கு 1,500 ரூபாய் தரமுடியும்? எஸ்.பி.வேலுமணிக்கு வேண்டிய அலுவர் ஒருவரின் வாகனத்திலிருந்து 50 கோடி ரூபாய் பறிமுதல் செய்யயப்பட்டது. இவை எல்லாம் யாருடைய பணம்? விவசாயம் செய்து அதில் கிடைத்த பணம் என்றால் விவசாயிகள் என்றோ பணக்காரர்கள் ஆகி இருப்பார்கள். இவர்கள் எத்தனை கோடி செலவு செய்தாலும் அது மக்களின் பணம். விக்கிரவாண்டி, நாங்குநேரியில் இப்போது அந்தக் கட்சியின் வேட்பாளர்களை ஜெயிக்க சொல்லுங்கள் பார்க்கலாம்.
’ஊழலில் விஞ்ஞானி’ என்று திமுகவைப் பார்த்து கூறும் அதிமுக, தற்போது அவர்களே வியக்கும் வண்ணம் பல ஊழல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இப்படிப்பட்ட சூழ்நிலையில் தமிழ்நாட்டைக் காக்க அனைவரும் குக்கர் சின்னத்திலும் அதன் கூட்டணிக் கட்சிகளின் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யவேண்டும்” என்று தெரிவித்தார்.
இந்தக் கூட்டத்தில் தொண்டர்கள் முழுக்கம் எழுப்பியவாறு சபதம் கொடுத்தனர். அப்போது அவர்களைப் பார்த்து, ”பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி வேலுமணி போன்று நடந்து கொள்கிறீர்கள்” என்று டிடிவி தினகரன் கடிந்து கொண்டார்.