கோயம்புத்தூர் மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் உள்ள 15 இடங்களில் அதிமுக 8 இடங்களையும், திமுக 6 இடங்களையும், சுயேட்சை ஒரு இடத்தையும் பெற்றது. சுயேச்சை உறுப்பினர் கனகராஜ் திமுகவில் இணைந்ததை அடுத்து, அவரை தலைவர் பொறுப்புக்கு திமுக முன்னிறுத்தியது. இதனிடையே அதிமுக சார்பில் இரண்டு முறை தலைவராக பதவிவகித்த மருதாசலம் தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டார்.
இந்த நிலையில் மார்ச் 4ஆம் தேதி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்கவிருந்தது. அப்போது இரு தரப்புக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாலும், வாக்குப்பெட்டி வெளியே வீசி எறியப்பட்டதாலும், தேர்தலை ரத்து செய்யப்பட்டது.
இதுதொடர்பாக அதிமுக சார்பில் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கில், தகுந்த கட்டுப்பாடுகளுடன் தேர்தலை மீண்டும் நடத்த உத்தரவிடப்பட்டது. அதனடிப்படையில் மார்ச் 26ஆம் தேதி மறைமுக தேர்தல் நடந்தது. இதனிடையே திமுக, அதிமுக உறுப்பினர்கள் பேரூராட்சி அலுவலகத்தில் தள்ளுமுள்ளு, கல்வீச்சில் ஈடுபட்டனர்.
அப்போது காவல்துறையினர் தடியடி நடத்திக் கூட்டத்தைக் கலைத்தனர். இதனிடையே திமுகவை சேர்ந்த வார்டு உறுப்பினர் குணசுந்தரியின் கணவர் செந்தில்குமாரின் தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அதிமுக உறுப்பினர்கள் தொடர்ந்து வாக்குவாதம் செய்ததோடு, அமளியிலும் ஈடுபட்டனர்.
அதிமுக வெற்றி: இறுதியாக 8 அதிமுக உறுப்பினர்களின் ஆதரவுடன் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுகவின் மருதாசலம் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து துணை தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தலில் அதிமுகவின் கணேசன் மட்டும் போட்டியிட்டு, வெற்றிபெற்றார். மறுபுறம் கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு சென்ற திமுக உறுப்பினர்கள் தேர்தலை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி, மாவட்ட வருவாய் அலுவலர் லீலா அலெக்சிடம் மனு கொடுத்தனர்.
ஜனநாயகம் காப்பாற்றப்படவில்லை: இதுகுறித்து அதிமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினர் இன்பதுரை கூறுகையில், "வெள்ளலூர் பேரூராட்சி மறைமுகத் தலைவர் தேர்தலில் ஜனநாயகம் காப்பாற்றப்படவில்லை. திமுகவினர் வேண்டுமென்றே அராஜகத்தில் ஈடுபட்டு கொலைவெறி தாக்குதல் நடத்தினர். ஆனால் இந்த சம்பவத்தில் அதிமுகவைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் பெண்கள் மீதும் வழக்குப் பதியப்பட்டுள்ளது. இது ஜனநாயகத்திற்குப் புறம்பாக உள்ளது.
தமிழ்நாடு முதலமைச்சர் கோவை மாவட்டத்தை வெறுப்பு கண்ணோட்டத்தில் வைத்துள்ளார். வெள்ளலூர் பேரூராட்சியில் வெற்றிபெற்ற கவுன்சிலர்களுக்கு உரியப் பாதுகாப்பு இல்லை. இந்த வன்முறைச் சம்பவத்தை மறைக்கும் நோக்கிலேயே எஸ்.பி. வேலுமணி மீது ஊழல் புகார் கொடுக்கப்பட்டுள்ளது" என்றார்.