கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையம், சிறுமுகை அடுத்த பெத்திகுட்டை பகுதியில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு உடல் நலம் பாதிக்கப்பட்ட 10 வயது ஆண் யானைக்கு வனத்துறையினர் தீவிர சிகிச்சை அளித்தனர்.
சிகிச்சைக்குப்பின் அந்த யானை மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. மேலும் உடல் நலம் தேறிய யானையை வனத்துறையினர் தொடர்ச்சியாக கண்காணித்து வந்த நிலையில், இன்று (ஜூன் 30) காலை வனப்பகுதிக்குள் சென்ற யானை திடீரென படுத்துக்கொண்டது.
இதுகுறித்து வனத்துறை ஊழியர்கள் உயர் அலுவலர்களுக்கு தகவல் அளித்தனர். இதனையடுத்து கோயம்புத்தூர் மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் உத்தரவின்பேரில் வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையில் மருத்துவக் குழுவினர் அங்கு சென்று உடல் நலம் பாதிக்கப்பட்ட யானைக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர்.
தொடர்ச்சியாக சிறுமுகை, பெத்திகுட்டை பகுதிகளில் யானைகள் உயிரிழந்து வருவதால் வனத்துறையினர் தனி கவனம் செலுத்தி விசாரணை நடத்த வேண்டும் என விலங்கு நல ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.