இசை பிரியர்களின் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ள மறைந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் நினைவாக கோயம்புத்தூரில் சிறுதுளி அமைப்பு, பேரூர் செட்டிபாளையம் பஞ்சாயத்து உடன் இணைந்து பச்சாபாளையம் பகுதியில் எஸ்பிபி வனம் அமைத்துள்ளது. இதனை திரைப்பட நடிகரும், சுற்றுச்சூழல் ஆர்வலருமான விவேக் திறந்து வைத்தார்.
இதன் பின் செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, எஸ்பி பாலசுப்பரமணியத்திற்கு மரியாதை செலுத்தும் விதமாக இந்த வனம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
உலகத்தில் அவர் வாழ்ந்த 74 ஆண்டுகளை குறிப்பிடும் வகையில், இசைக்கருவிகள் செய்யக்கூடிய 74 வகையான மரங்கள் நடப்பட்டு உள்ளன. இது புதிய முயற்சி. இயற்கைக்கும் உதவும் வகையிலும் மிகப்பெரிய பாடகருக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டதில் நான் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்கள் அவரிடம் திரைத்துறையில் நடிகைகளின் தற்கொலை அதிகரித்து வருவது குறித்து கேள்வியெழுப்பினர். அதற்கு அவர் கூறுகையில், தற்கொலைக்கு யாரும் முயற்சிக்க கூடாது. இது கோழைத்தனமான முடிவு. சில சந்தர்ப்பங்களில் மனம் தளரும்போது எடுக்கக்கூடிய தவறான முடிவு. அதை தாண்டி வாழ்க்கையில் ஜெயித்தவர்கள் ஏராளம். தற்கொலை தவிர்க்கப்பட வேண்டியது அதனை தவிர்த்து விட்டால் அதற்கான வெற்றி அவருக்கு காத்திருக்கும் என்றார்.
விவசாயிகள் டெல்லியில் போராட்டம் மேற்கொண்டு வருவது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர் ஒரு விவசாயி கஷ்டப்படுவது என்பது மிகப்பெரிய வேதனையானது. வேளாண் மசோதா குறித்து முழுமையான விவரங்கள் தெரியாமல் பேச விரும்பவில்லை என தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கிணத்துக்கடவு சட்டப்பேரவை உறுப்பினர் சண்முகம், சிறுதுளி அமைப்பின் தலைவர் வனிதா மோகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.