கோயம்புத்தூர்: கோவை சவுரிபாளையத்தில் வள்ளி கும்மி ஆட்டம் நேற்றிரவு நடைபெற்றது. அதில் சுமார் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாரம்பரிய கலையான வள்ளி கும்மியாட்டத்தை ஆடி அசத்தினர். மேலும் இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக நடிகர் ரஞ்சித் கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் ரஞ்சித், "நான் பிறந்த மண்ணில் நிற்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. நமது கலாச்சாரமான வள்ளி கும்மியாட்டம், கோலாட்டம், குச்சி ஆட்டம் போன்ற கலைகள் நம் மண்ணில் பரவிருந்த நிலையில், தற்போது மண்ணோட மண்ணாக போய்விட்டது.
நான் ஒரு திரைப்பட கலைஞராக சொல்கிறேன். இன்றைக்கு இருக்கும் காலகட்டத்தில் சினிமா பட நடிகர்கள் துணிக்கடை திறப்பு விழாவிற்கு கூட 5 லட்சம் முதல் 7 லட்சம் பணம் வாங்கி நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்கள். அந்த காலத்தில் வயக்காட்டில் குழந்தையைத் தொட்டில் போடும்போது வேலை செய்யும் போதும் கும்மி பாடி ஆனந்தமாக இருந்தார்கள்.
ஆனால் இன்றைய காலக்கட்டத்தில் அனைவரும் செல்போனை பயன்படுத்தி செல்போனை தான் காதலிக்கிறோம் தவிர மனிதர்களை யாரும் காதலிக்கவில்லை. இந்த வள்ளி கும்மியாட்டம் மருமகள், மாமியார், பேரன், பேத்தி ஆகியோர் ஒன்றிணைந்து ஆடும் ஒரு ஆட்டம் ஆகும் என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், Happy Sunday, Happy Street நிகழ்ச்சி நடத்தும் நிகழ்ச்சியாளர்களை எங்கிருந்துடா வரீங்க?... என்று கேள்வி எழுப்பினார். பெண்களை ரோட்டில் நிக்க வைத்து அரைகுறையாக துணி அணிந்து ஆடுவது மிகவும் வேதனை அளிக்கிறது. எனக்கு அரசு அதிகாரி என்ற ஒரு அதிகாரம் இருந்தால் இவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்குவேன்.
ஊருக்கு நடுவுல அரைகுறை துணியில் சினிமா பாடலுக்கு ஆடுவது Happy Sunday யா?. உடற்பயிற்சி கூடத்திற்கு செல்வதும், நடனத்துக்கு செல்வதும் தவறு இல்லை. யார் மகனோ யாரோடு ஆடுவது?? யார் பெண்ணோ யாரோடு ஆடுவது?? மன அழுத்தத்தை போக்க தெருவில் ஆடுவது ஒரு ஹேப்பியா? அதுக்கு ஒரு பாராட்டா என்று விமர்சனம் செய்தார்.
மேலும் இது போன்ற கலாசாரம் அடுத்த பேரழிவு நோக்கி எடுத்துச் செல்லும் எனவும் முதலில் மொபைல் போன் பேசுவதற்காக பயன்படுத்தப்பட்டது. ஆனால் இன்று குழந்தைகள் ஆபாச படம் பார்ப்பதற்காக மொபைல் போன் பயன்படுத்துகிறார்கள்.
ஹேப்பி சண்டே ஹேப்பி ஸ்ட்ரீட் என தாய்லாந்து, சிங்கப்பூர் போல கலாச்சாரத்தை நாம் வளர விடக்கூடாது, வளர விடமாட்டோம்! என நம்புகிறேன். "ஹேப்பி சண்டே ஹேப்பி சண்டே" என ஊக்குவிப்பதை விட இதுபோல பாரம்பரிய கலாச்சாரமான வள்ளி கும்மி ஆட்டத்தை ஊக்குவித்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டும்" என தெரிவித்தார்.