கோவை: சட்டப்பேரவைத் தேர்தலில், தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக மக்கள் நீதி மய்ய தலைவர் கமல்ஹாசன் நேற்று கோவை வந்திருந்தார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “நேர்மையாக வாக்களித்த கோவை தெற்குத் தொகுதி மக்களுக்கு நன்றி.
பகிரங்கமாகக் காசு கொடுக்க மாட்டோம் எனக் கூறியபோதும், வெற்றியின் மிக மிக அருகில் கொண்டு சென்றனர். பாஜகவின் கொங்குநாடு கோஷம், அரசியல் கோஷமே தவிர மக்களின் கோஷம் இல்லை. பாஜக ஒரு பெரிய கம்பெனி. தமிழ்நாட்டில் வட இந்திய கம்பெனியை உருவாக்க முயல்கின்றனர்.
இரட்டை வேடம் போடும் பாஜக
வியாபாரத்திற்குச் சவுகரியமாக இருக்கும் என, எங்கள் வளங்களைத் தனியாருக்குத் தூக்கிக் கொடுக்க முயன்றால் அது கம்பெனிதான். இந்தச் சுரண்டலுக்கு எந்த மாநிலமும் இடம் கொடுக்காது. நலத்திட்டம் என்று எதுவும் பெரிதாக இல்லை. நியாயம் சொல்லும் மையங்களைக் கொஞ்சம் கொஞ்சமாக மூடி வருகின்றனர். இது சினிமா தொழிலிலும் நடக்கின்றது.
இந்தியாவிலேயே அதிகம் இரட்டை வேடம் நடித்தவன் நான். இரட்டை வேடம் போடுபவர்களைச் சட்டெனக் கண்டுபிடிப்பேன். மேகதாது விவகாரத்தில் பாஜக இரட்டை வேடம்தான் போடுகிறது. போராடும் இருவருக்கும் வேறு, வேறு பெயர்கள் இருந்தாலும், இருவருமே ஒன்றிய அரசின் பொம்மைகள்தான். கரோனா விவகாரத்தில் அரசு இயன்றதைச் செய்கின்றது.
தோல்வி தந்த பாடம் வெற்றிக்கானது
அது போதாது இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும். முழுநேர அரசியல்வாதி என எவரும் இல்லை. எனது தொழில் நடிப்பு. உள்ளாட்சித் தேர்தல் எனது கடமை. மக்களாட்சி மலர வேண்டும் என நினைப்பவர்கள் நாங்கள். தோல்வி வந்தால் விட்டுவிட்டுச் சென்று விடுவேன் என்றால், சினிமாவையும் விட்டுவிட்டுச் சென்றிருக்க வேண்டும்.
தோல்வி தந்த பாடம், அடுத்த வெற்றிக்காக அமையும். ஆயிரத்து 500, இரண்டாயிரம் என்ற வித்தியாசம் எல்லாம் ஒரு கணக்கே கிடையாது. இழந்த அரசியல் மாண்பை மீட்டெடுக்க வந்த கட்சியின் தொண்டன் நான். மகேந்திரன் போன்றவர்கள் திமுக சென்றதால் எந்தப் பாதிப்பும் இல்லை. கோவை தெற்கு தொகுதியில் சட்டப்பேரவை உறுப்பினராக வானதி சீனிவாசன் தென்படவில்லை. லாபம் என எழுதிவைத்திருந்த பலகையை மட்டுமே பார்த்தேன்” என்றார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்கும் திட்டம் இல்லை - மத்திய அரசு திட்டவட்டம்