கோயம்புத்தூர்: மேட்டுப்பாளையம் வனப்பகுதி என்பது யானை வலசை பாதையில் முக்கிய இடமாகும். மேலும், இங்குள்ள கல்லாறு வழித்தடம் ஆண்டுதோறும் யானைகள் பயணிக்கும் பகுதியாகும். கேரள வனப்பகுதியில் இருந்து வெளியேறும் யானைகள் ஆனைகட்டி, பெரியநாயக்கன்பாளையம், காரமடை வழியாக கல்லாறு அடைந்து அங்கிருந்து பவானிசாகர் அணையின் நீர் பிடிப்பு பகுதியான சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் வழியாக சென்று, அங்கிருந்து நீலகிரி மற்றும் கர்நாடகா, கேரளா வனப்பகுதிக்குள் செல்வது வழக்கம்.
இந்த நிலையில் கல்லாறு யானைகள் வழித்தடத்தில் ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளதால் யானைகள் வழி மாறி குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து வருவதாக சூழலியல் ஆர்வலர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுமுகை மற்றும் மேட்டுப்பாளையம் வனச்சரகத்தில் சுற்றி வரும் ஆண் யானை ஒன்றுக்கு அப்பகுதி மக்கள் பாகுபலி என்று பெயர் வைத்து அழைத்து வருகின்றனர்.
இந்த பாகுபலி யானை நாள்தோறும் மாலை நேரத்தில் வனப்பகுதியில் இருந்து வெளியேறி விவசாய நிலங்களில் புகுந்து நாசம் செய்து வருகிறது. தற்போது இந்த யானை மேட்டுப்பாளையம் - ஊட்டி சாலையை கடந்து விவசாய தோட்டங்களில் புகுந்து வருகிறது. இந்த யானை செல்லக்கூடிய வழிகளில் ஆங்காங்கே தடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதால் யானை அந்தப் பகுதி வழியாக செல்ல முடியாமல் மாற்று பாதையை பயன்படுத்தி வருகிறது.
இந்நிலையில் நேற்று மாலை வனப்பகுதியில் இருந்து வெளியேறிய பாகுபலி யானை தாசம்பாளையம் பகுதியில் சுற்றி வந்தது. பின்னர் அங்குள்ள சோளக்காட்டில் புகுந்து சாப்பிட்டவிட்டு, அங்குள்ள பெருமாள் கோயில் முன்பு சென்று அங்கிருந்து கேட்டை உடைத்துக் கொண்டு கோயில் வளாகத்திற்குள் புகுந்தது. இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அந்த யானையை கோயிலிலிருந்து வனப்பகுதிக்குள் விரட்டினர்.
இந்நிலையில், இந்த பாகுபலி யானை, இன்று அதிகாலை 4 மணி அளவில் தாசம்பாளையம் பகுதியில் சுற்றி வருவதும், பெருமாள் கோயில் முன்பு வந்து அங்கு இருந்த கேட்டை உடைத்துக் கொண்டு கோயில் வளாகத்துக்குள் வரும் காட்சிகள் அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. தற்போது அந்த காட்சிகள் வைரலாக பரவி வருகிறது.
இது குறித்து சூழலியல் ஆர்வலர்கள் கூறுகையில், "யானை செல்லக்கூடிய பாதைகள் அனைத்திலும் தடைகள் ஏற்படுத்தப்பட்டதால் தான் யானை குடியிருப்பு பகுதியிலேயே சுற்றி வருகிறது. உடனடியாக யானை செல்லக்கூடிய பாதைகளில் உள்ள தடைகளை அகற்ற வேண்டும்” என வலியுறுத்தி உள்ளனர்.
இதையும் படிங்க: குன்னூரில் இரவு நேரத்தில் உலா வரும் கரடி: திக்... திக் வீடியோ காட்சி!