விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த சிவமுருகன் மருதமலை அடிவாரம் அமர்ஜோதி நகர் பகுதியில் மனைவி வைரமனி மற்றும் மகள்கள் யுவஸ்ரீ, ஹேமலதா ஆகியோருடன் வசித்து வந்தார். இந்த நிலையில் கடன் தொல்லை காரணமாக குடும்பத்துடன் வியாழக்கிழமை அதிகாலை வாழைபழத்தில் விஷம் வைத்து தின்று தற்கொலை செய்துகொண்டார்.
இதில் ஹேமலாதவை தவிர்த்து அனைவரும் உயிரிழந்த நிலையில் இது குறித்து வடவள்ளி காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சிவமுருகன் தற்கொலைக்கு முன்பாக கடைசியாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது. அதில் தான் உண்மையாக 100/100 பாடுபட்டதாகவும் வாங்கிய கடனை திருப்பி செலுத்த முயன்றேன். ஆனால் என்னிடம் பணம் வாங்கியவர்கள் என்னை ஏமாற்ற தான் செய்தார்கள், பணம் திருப்பி செலுத்த முடியாத காரணத்தால் தனது மகள்கள் குறித்து அசிங்கமாக விமர்சனம் செய்தனர் என வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.
ஐ.ஓ.பி காலணி பகுதியை சேர்ந்த இருவர் 18 லட்ச ரூபாய் பெற்று 8 ஆண்டுகள் ஆகியும் வாங்கிய பணத்தை தராமால் தன்னை ஏமாற்றி விட்டனர் என பதிவிட்டுள்ள சிவமுருகன், இந்த கடன்களில் இருந்து தன்னால் மீள முடியவில்லை அதனால் தனது வாழ்கையை முடித்து கொள்கிறேன். எனக்கு உதவிய அனைவருக்கும் நன்றி என பேசியுள்ளார்.
மேலும், தன்னை திட்டமிட்டு அசிங்கபடுத்தும் நோக்கில் ஒரு நபர் செயல்பட்டார். அவர் யார் என்பது இறைவனுக்கு தெரியும் என வீடியோவில் பதிவிட்டுள்ளார். சிவ முருகனின் இந்த மரண வாக்குமூல வீடியோவை வைத்து தற்கொலைக்கு தூண்டியதாக அப்பகுதியைச் சேர்ந்த சிலர் மீது வடவள்ளி காவல்துறை வழக்குப்பதிவு செய்யவுள்ளதாக கூறப்படுகிறது.