கோவை: கோயம்புத்தூர் சிட்கோ பகுதியை சேர்ந்த ரவிசங்கர் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் பகுதி நேர வேலை செய்யலாம் என டெலிகிராம் ஆப்பில் வந்த ஒரு லிங்குக்குள் சென்று பார்த்தபோது சுற்றுலா தளங்களுக்கு ரேட்டிங் தரும் பணி என்று இணையதளம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த இணையதளத்திற்கு சென்று சாட்டிங் செய்தபோது எதிர் தரப்பிலிருந்து தாங்கள் பெங்களூரில் இருந்து பேசுவதாகவும், இது கிளை அலுவலகம் என்றும் தெரிவித்துள்ளனர்.
இந்த பணிக்கு முன்பணம் கட்டி ரேட்டிங் பணியில் ஈடுபட வேண்டும் என்று கூறியுள்ளனர். சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சுற்றுலா பயணிகள் அந்த பகுதியை பற்றி ஸ்டார் ரேட்டிங் தருவதை போல வீட்டிலிருந்து ரேட்டிங் தந்து பணம் சம்பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை நம்பிய ரவிசங்கர் கடந்த நவம்பர் 23-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்கு தொடர்ந்து முன் பணம் கட்டி பல்வேறு டூரிஸ்டு சைட்டின் பேஜ்களை (Badge) பெற்று பணியில் ஈடுபட்டிருக்கிறார். ஆறு நாட்களில் மட்டும் ஏராளமான சைட்டுகளில் சுற்றுலா தளங்களுக்கு ரேட்டிங் தர 32 லட்சத்து 23 ஆயிரத்து 909 ரூபாய் பணத்தை ஆன்லைனில் செலுத்தியிருக்கிறார்.
ஆனால் ஒரு ரூபாய் கூட திரும்ப வராலும் டெலிகிராமில் நடந்த உரையாடல்களும்(chat) கிளியர் செய்யப்பட்டுள்ளது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் தான் ஏமாற்றப்பட்டது குறித்து மாநகர சைபர் கிரைம் போலிசில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மாநகர மற்றும் மாவட்ட காவல்துறையினர் இது போன்று ஆன்லைனில் பணம் செலுத்தி ஏமாற வேண்டாமென பலமுறை எச்சரித்தும் படித்த இளைஞர்கள் பலரும் இவ்வாறு ஏமாறுவது தொடர் கதையாகி வருகிறது.
இதையும் படிங்க: Christmas: கோவையில் தயாராகும் 600 கிலோ மெகா கேக்!