கோவை மாவட்டம் காந்திபுரம் காவல் நிலையத்தில் ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் போலீஸாக செந்தில்குமார் பணியாற்றிவந்தார். இவர் அதே பகுதியைச் சேர்ந்த தனலட்சுமி என்பவரிடம், ரியல் எஸ்டேட்டில் நிலம் வாங்கி தருவதாகக் கூறி 4 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் காசோலையை வாங்கியுள்ளார்.
இதையடுத்து தனலட்சுமி அந்த இடத்திற்குச் சென்று ஆய்வுசெய்து, பத்திரப்பதிவு குறித்து பார்க்கையில் நிலமானது இவர் பெயருக்கு பதிவு செய்யப்படாமல் இருந்துள்ளது. இதுகுறித்து செந்தில்குமாரிடம் கேட்கையில் நிலத்தினைப் பதிவு செய்யவில்லை என்றும், பணத்தைத் திருப்பித் தர முடியாது எனவும் தனலட்சுமியிடம் கூறியுள்ளார்.
இதையடுத்து தனலட்சுமி காட்டூர் காவல் நிலையத்தில் செந்தில்குமார் மீது புகார் அளித்துள்ளார். அதனடிப்படையில் செந்தில்குமாரிடம் காட்டூர் காவல்துறையினர் நடத்திய விசாரணையில், அவருடன் சேர்ந்து ஈஸ்வரன், கிருஷ்ணமூர்த்தி ஆகிய இருவரும் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து மூன்று பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடைபெற்றுவருகிறது.