கோயம்புத்தூர் மாவட்டம் சூலூர் அருகே உள்ள முத்துகவுண்டன்புதூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக சூலூர் காவல் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, காவல் துறையினர் அப்பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, முத்துகவுண்டன்புதூர் பகுதியிலுள்ள ஒரு தனியார் நிறுவனத்தின் அருகே நின்றுகொண்டிருந்த லாரியின் அருகில் கூட்டம் நிற்பதைக் கண்ட காவல் துறையினர் அங்கு விரைந்துள்ளனர். அப்போது அங்கிருந்தவர்கள் காவல் துறையினரைக் கண்டதும் ஓட்டம் பிடித்தனர்.
இதனையடுத்து அங்கு நின்றிருந்த லாரி ஓட்டுநரிடம் காவலர்கள் நடத்திய விசாரணையில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்துள்ளார். அதனால், லாரி ஓட்டுநரை சூலூர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையின் போது, அவர் தென்காசி பகுதியைச் சேர்ந்த காந்தி (34) என்பதும், அவர் கர்நாடக மாநிலத்திலிருந்து ஈச்சர் வாகனம் மூலம் மதுபாட்டில்கள் கடத்தி வந்து சூலூர் பகுதியிலுள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரியும் வட மாநிலத் தொழிலாளர்களுக்கு விற்பனை செய்ததும் தெரியவந்தது. மேலும் முன்னதாக வரும் வழியில் மது பாட்டில்களை விற்பனை செய்ததையும் அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதனையடுத்து, லாரி ஓட்டுநர் காந்தி மீது வழக்குப்பதிவு செய்த சூலூர் காவல் துறையினர் அவரிடமிருந்து 2 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள உயர்ரக மது பாட்டில்கள், இரண்டு லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோயம்புத்தூர் மத்திய சிறையில் அடைத்தனர்.