சென்னை: முத்தியால்பேட்டை மலையப்பன் தெரு பகுதியில் தனது சகோதரர்களுடன் வசித்து வருபவர் ஜமால். இவர் பர்மா பஜார் பகுதியில் தனது சகோதரர்களுடன் சேர்ந்து செல்போன் கடை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில், இவரது வீட்டிற்கு இன்று(டிச.13) காலை வந்த 4க்கும் மேற்பட்ட நபர்கள் கொண்ட கும்பல் ஒன்று ஜமாலிடம் தாங்கள் என்.ஐ.ஏ அதிகாரிகள் எனவும்,
கோவை குண்டுவெடிப்பில் தொடர்பு இருப்பதாகவும் தங்கள் வீட்டை சோதனையிடவுள்ளதாகக் கூறி அவர்களின் செல்போன்களையும் வாங்கி வைத்துக்கொண்டு சோதனை நடத்தியுள்ளனர். அதனைத் தொடர்ந்து பர்மா பஜாரில் உள்ள ஜமாலின் கடையிலும் அதே கும்பல் சோதனை நடத்தியுள்ளது. சோதனை நடத்தியதில் ஜமாலின் கடையில் இருந்து 10 லட்சம் ரூபாய் பணமும், வீட்டில் இருந்து 10 லட்சம் ரூபாய் பணமும் அந்த கும்பல் கொள்ளையடித்துச் சென்றுள்ளது.
இதற்கிடையே, முத்தியால்பேட்டை மற்றும் பர்மா பஜார் பகுதிகளில் என்.ஐ.ஏ சோதனை நடந்துள்ளதாக கிடைத்த தகவல் அறிந்து முத்தியால்பேட்டை காவல் நிலைய போலீசார் மேற்கொண்ட விசாரணையில் ஜமால் வீடு மற்றும் கடையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி ஒரு கும்பல் போலியாக சோதனை நடத்தி 20 லட்சம் ரூபாய் பணம் கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது.
பின்னர் ஜமாலிடம் இது குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோதே சோதனை நடத்திச் சென்றது உண்மையான என்.ஐ.ஏ அதிகாரிகள் இல்லை என்பது ஜமால் மற்றும் சகோதரர்களுக்கு தெரியவந்தது. அதன் தொடர்ச்சியாக ஜமாலிடம் இச்சம்பவம் தொடர்பாக புகாரைப் பெற்று பூக்கடை துணை ஆணையர் தனிப்படை போலீசார் உதவியுடன், முத்தியால்பேட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் ஜமால் மற்றும் சகோதரர்கள் ஹவாலா தொழிலில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் ஜமால் மற்றும் சகோதரர்களின் வீடு, கடைகளில் பணப் புழக்கம் இருப்பதை அறிந்து மர்ம கும்பல் என்.ஐ.ஏ அதிகாரிகள் என்ற போர்வையில் வீட்டில் சோதனை நடத்திவிட்டு, பின்பு அந்த கும்பலில் வந்த ஒருவர் இருசக்கர வாகனத்தில் செல்போன் கடைக்கு அழைத்து சென்று மொத்தம் 20 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துத் தப்பிச் சென்றுள்ளதும் தெரியவந்தது.
இந்நிலையில் சிசிடிவி காட்சிகளை வைத்து என்.ஐ.ஏ அதிகாரிகள் எனக்கூறி சோதனை நடத்தி பணத்தை கொள்ளையடித்த கும்பலை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். மேலும் கோவை குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தொடர்ச்சியாக என்.ஐ.ஏ அதிகாரிகள் மண்ணடி, பூக்கடை உள்ளிட்ட இடங்களில் அடிக்கடி சோதனை நடத்தி வரும் சூழலில், அதையே சாதகமாக பயன்படுத்தி இந்த மர்ம கும்பல் என்.ஐ.ஏ அதிகாரிகள் போல நடித்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் ஜமால் மற்றும் சகோதரர்களில் யாரேனும் ஆள் வைத்து என்.ஐ.ஏ சோதனை நாடகத்தை அரங்கேற்றி கொள்ளையடித்திருக்க வாய்ப்புள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: 'மக்கள் அழைத்தால் அரசியலுக்கு வருவேன்' - லெஜண்ட் சரவணன் 'பளீச்' பதில்