கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் பால் நிறுவனம் அருகே விக்னேஷ் என்பவர், தான் வளர்த்துவரும் பசுமாடுகளை வைத்து பால் வியாபாரம் செய்துவருகிறார். இந்நிலையில், இன்று காலை அவருக்குச் சொந்தமான பசுமாடு ஒன்று கன்றை ஈன்றது. அப்போது, கர்ப்பப் பை வெளியே வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த அவர், கால்நடை பராமரிப்புத் துறையின் இலவச எண்ணைத் தொடர்புகொண்டு தகவலளித்துள்ளார்.
அங்கு சென்று பசுவைப் பரிசோதனைசெய்த கால்நடை மருத்துவர், அதனை உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல வேண்டும் எனக் கூறினார். அதன்படி கால்நடை பிணியூர்தி மூலம் கோவை டவுன்ஹாலிலுள்ள கால்நடை மருத்துவமனையில் பசு சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டது. பசுவுக்கு உடனடியாகச் சிகிச்சை அளிக்குமாறு விக்னேஷ் அங்கிருந்த கால்நடை மருத்துவர்களிடம் கூறியுள்ளார்.
ஆனால், இதனைப் பொருட்படுத்தாத மருத்துவர்கள் பசுவுக்கு சிகிச்சை அளிக்காமல் இருந்துள்ளனர். இதனால் பசு பரிதாபமாக உயிரிழந்தது. இதில் கடும் மன உளைச்சலுக்கு ஆளான விக்னேஷ், இச்சம்பவம் தொடர்பாகக் கால்நடை இணை இயக்குநரிடம் புகார் அளித்துள்ளார்.
புகாரில், "பலமுறை மாட்டின் நிலை குறித்து மருத்துவர்களிடம் தகவல் தெரிவித்தும், அலட்சியமாக மருத்துவர்கள் நடந்துகொண்டதால் பசு இறந்துவிட்டது. எனக்கு வாழ்வாதாரமாக இருந்த பசுவின் உயிரிழப்பிற்கு மருத்துவர்களே காரணம் என்பதால், எனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க : தகுதியின் அடிப்படையில் ஹெச்1-பி விசா வழங்குங்கள்: ட்ரம்ப் உத்தரவு