கோவை: தொண்டாமுத்தூர் குளத்துப்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 35). இவரது மனைவி வெண்ணிலா (வயது 30). கடந்த 7 ஆண்டுகளுக்கு முன் அய்யாசாமி - வெண்ணிலா ஆகிய இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. அய்யாசாமி பழைய கார்கள் வாங்கி விற்கும் டீலர் வேலை செய்து வருகிறார். அவரது மனைவி வெண்ணிலா வீட்டை கவனித்து வருவதாக கூறப்படுகிறது.
குழந்தைகள் இல்லாத காரணத்திற்காக இவர்கள் இருவரையும் உறவினர்கள் ஏற்றுக் கொள்ளாமல் உதாசீனப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது. கடந்த 4 மாதங்களுக்கு முன் தாலியூர் பகுதியில் சொந்தமாக வீடு கட்டி இருவரும் குடியேறி உள்ளனர். இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களாக அய்யாசாமியின் வீடுக் கதவு திறக்காமலேயே இருந்ததாகக் கூறப்படுகிறது. மேலும் வீட்டினுள் இருந்து துர்நாற்றம் வீசி உள்ளது. இதனால் சந்தேகமடைந்த அண்டை வீட்டார் காவல்துறைக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.
தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தொண்டாமுத்தூர் போலீசார் வீட்டைத் திறந்து பார்க்கும் போது வீட்டில் உள்ள அறையில் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் உயிரிழந்து கிடந்து உள்ளனர். பின்னர் இருவரின் உடல்களையும் மீட்ட போலீசார், பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மேலும் சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இது குறித்து போலீசார் நடத்திய முதற் கட்ட விசாரணையில், கடன் வாங்கிய இடத்தில் நெருக்கடி கொடுத்ததாலும், காதல் திருமணம் செய்து 7 ஆண்டுகள் ஆகியும் குழந்தைகள் இல்லாததால் உறவினர்கள் யாரும் ஏற்றுக் கொள்ளாத காரணத்தாலும் இருவரும் நீண்ட நாட்களாக மன வருத்தத்திலிருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இருவரும் இந்த விபரீத முடிவை எடுத்து இருக்கலாம் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன் தான் சொந்த வீடு கட்டி அய்யாசாமி - வெண்ணிலா தம்பதி குடிபெயர்ந்த நிலையில், திடீரென இருவரும் தற்கொலை செய்து கொண்டது அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் அய்யாசாமி - வெண்ணிலா தம்பதி உயிரிழப்பில் வேறு ஏதும் காரணங்கள், மர்மங்கள் உள்ளனவா என்றும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதேபோல், கடந்த வாரம் கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்த இடிகரை, கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த வினோத் மீனாட்சி தம்பதி திருமணம் முடிந்து 11 ஆன்டுகள் ஆகியும் குழந்தை இல்லாத விரக்தியில் இருந்து உள்ளனர்.
மேலும் வினோத், நண்பர்களிடம் கடன் வாங்கி இருந்ததாகவும் அதனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த இரு வேறு பிரச்னைகளின் நெருக்கடி காரணமாக வினோத் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாகவும் வழக்குப்பதிந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: "ஆன்லைன் ரம்மி தடை சட்டம் இந்தியாவுக்கு முன்மாதிரி, ஆளுநருடன் விவாதிக்கத் தயார்" - அமைச்சர் ரகுபதி!