கோயம்புத்தூர்: பொள்ளாச்சி அடுத்துள்ள கிணத்துக்கடவு வடபுதூர் பாரதி நகரில் குப்புசாமி என்ற விவசாயி தோட்டத்தில் மயில்கள் கொன்று வாழைத்தோட்டத்தில் புதைத்து வைத்திருப்பதாகப் பொள்ளாச்சி வனச்சரக அலுவலர் புகழேந்திக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
இதனையடுத்து கிணத்துக்கடவு அடுத்துள்ள வடபுதூர் பாரதி நகரில் குப்புசாமி என்பவரது தோட்டத்திற்குப் பொள்ளாச்சி வனத்துறையினர் விரைந்து சென்று அங்கு உள்ள வாழைத்தோப்பில் மூடப்பட்டிருந்த 3 குழிகளைத் தோண்டி பார்த்த போது அங்கு ஒரு ஆண்மயில் மற்றும் 8 பெண்மயில் என மொத்தம் 9 மயில்கள் இறந்த நிலையில் புதைக்கப்பட்டிருந்தன.
இதனையடுத்து புதைக்கப்பட்ட 9 மயில்களை வனத்துறையினர் மீட்டு மயில்கள் புதைக்கப்பட்ட பகுதியில் ஆய்வுசெய்தபோது அங்கு அரிசி சிதறிக் கிடந்ததை வனத்துறையினர் கண்டுபிடித்தனர்.
இதனால் அரிசியில் விஷம் கலக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் வனத்துறையினருக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வனத்துறையினர் கால்நடை மருத்துவர்களுக்கும் தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து கால்நடைத்துறை மருத்துவர்களும் சம்பவ இடத்திற்கு வந்து மயில்களைப் பார்வையிட்டு மயில்களின் சாவுக்குக் காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
இந்தவிலையில் தற்போது விவசாயி குப்புசாமி தலைமறைவாக உள்ளார். அவரை வனத்துறையினர் தீவிரமாகத் தேடிவருகின்றனர். அவர் பிடிபட்ட பின்னர்தான் மயில்களின் இறப்பிற்கான காரணம் தெரியும் என வனத்துறையினர் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: ஈராயிரம் ஆண்டுகள் பழமையான தமிழர் திருவிழா ஜல்லிக்கட்டு!