கோவை: கோவை காந்திபுரம் பகுதியில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் 8 ஆண்டு கால சாதனைகள் பிரசுரங்களை வழங்கி மக்கள் நலத்திட்டங்களை தொடங்கிவைத்த கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் பொதுமக்களுக்கு வழங்கினார். பின்னர் பாஜக அலுவலகத்தில் செல்வ மகள் சேமிப்பு திட்ட அட்டைகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன், “உலக நாடுகளை கரோனா பாதிப்பு அச்சுறுத்திய போது இந்தியாவில் தடுப்பூசி கண்டுபிடித்து மக்கள் அனைவருக்கும் இலவசமாக தடுப்பூசி வழங்கி மக்களை பாதுகாத்த தலைவராக பிரதமர் நரேந்திர மோடி உள்ளார். உணவு தானியம், தடுப்பூசியை தாண்டி, சிறு குறு தொழில்களுக்கு உதவியுள்ளார்” என்றார்.
இஸ்லாமிய பெண்களுக்கு பாதுகாப்பு: தொடர்ந்து, பெண்களை பொருளாதாரத்தில் உயர்த்த அனைவருக்கும் வங்கி திட்டம் ஏற்படுத்தினார். டிஜிட்டல் பொருளாதார சூழலை உருவாக்கியுள்ளார். ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் தமிழ்நாடு அதிக பலன் அடைந்துள்ளது. முத்ரா கடன் தமிழ்நாட்டில் அதிகம் கொடுக்கப்பட்டுள்ளது.
செல்வமகள் திட்டம், அனைவருக்கும் கழிப்பறை, அனைவருக்கும் வீடு, ஆகியவற்றில் தமிழ்நாடு பயனடைந்துள்ளது. தொழில்துறையில் 3100 கோடிக்கு மேலாக முதலீடு வந்துள்ளது. இஸ்லாமிய பெண்களுக்கு திருமண உறவில் பாதுகாப்பு கிடைத்துள்ளது. மத்தியில் 11 பெண் அமைச்சர்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
இராணுவத்தில் பெண்கள்: இராணுவத் துறையிலும் பெண்களுக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. பெண்கள் சொந்தமாக தொழில் புரிய மானியத்துடன் கடன் வழங்கும் திட்டம் வழங்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் திறன்களை மேம்படுத்த தனி அமைச்சகம் உருவாக்கப்பட்டுள்ளது. சூரிய ஒளி மின்சாரத்தை அதிகமாக பயன்படுத்த வேண்டும்.
பிரதமர் தேவையில்லாத சட்டங்களை நீக்கி அவசியமான சட்டங்களை கொண்டு கொண்டுவந்தவர். நாட்டில் இருந்த பிரதமர்களின் வாழ்க்கைகளை தெரிந்துகொள்ள அலுவலகத்தை அமைத்துள்ளார். நதிகளை இணைக்க பிரதமர் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கியுள்ளார். அதற்காக தமிழ்நாடும் இணைந்து முயற்சி செய்ய வேண்டும். வளர்ச்சி என்பது அனைவருக்குமானது என்பதை பிரதமர் நரேந்திர மோடி லட்சியமாக வைத்து உள்ளார்.
வாக்குறுதி மறந்த திமுக: கலவரங்கள் இல்லாமல் மக்கள் இணக்கத்துடன் வாழவேண்டும், மத சுதந்திரத்தை காக்கின்ற அரசாக இந்த அரசாங்கம் உள்ளது. 1 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை மத்திய அரசின் திட்டங்கள் மக்களிடம் கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
திமுக எந்த வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்தார்களோ அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி கொண்டு இருக்கிறார்கள். ஆளும் கட்சி வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், மத்திய அரசு வாக்குறுதிகளை கொடுக்காமலேயே இரண்டு முறை பெட்ரோல் டீசல் விலையை குறைத்துள்ளது” என்றார்.
கார்த்திக் கோபிநாத் கைது: தொடர்ந்து, பாஜக ஆதரவாளர் கார்திக் கோபிநாத் கைது தொடர்பான கேள்விக்கு பதிலளித்த வானதி சீனிவாசன், “மீண்டும் மீண்டும் பாஜக ஆதரவாளர்களை கைது செய்வதன் வாயிலாக பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்கு உதவி செய்கிறீர்கள்.
கருத்துக்களை பொதுவெளியில் சட்டத்திற்கு உட்பட்டு சொல்வதற்கு உரிமை உண்டு. அதேபோல், விசாரணை முடிந்த நிலையிலும் நள்ளிரவில் தீவிரவாதியை போல கைது செய்வது மாநிலத்தின் கருத்து சுதந்திரமா என மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்” என்றார்.
தேசிய கொடி காவி நிறமாக மாறுமா?: மேலும், இம்மாதிரியான முயற்சிகள் மூலம் பாஜகவின் ஆதரவாளர்களை முடக்கி விடலாம் என்று நினைத்தால் அந்த கனவு ஒரு போதும் பலிக்காது” என்றார். தொடர்ந்து, “கர்நாடகாவில் பாஜக எம்எல்ஏ ஈஸ்வரப்பா காவிக்கொடி ஒருநாள் தேசிய கொடியாக மாறும் என தெரிவித்துள்ளாரே என்ற என்ற கேள்வியெழுப்பப்பட்டது.
அதற்கு வானதி, “தேசியக்கொடிக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இந்த நாட்டில் மாறாது. அரசியலமைப்புச் சட்டத்தின்படி இருப்பது ஒரு போதும் பாஜக மாற்ற நினைக்காது” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க:'திமுகவினர் பணப்பட்டுவாடா; தட்டிக்கேட்டால் மிரட்டப்படும் பாஜகவினர்!'