கோயம்புத்தூர்: திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்தவர் சரவணகுமார். இவர் பொள்ளாச்சியை அடுத்த நஞ்சேகவுண்டன் புதூரில் குடும்பத்துடன் தங்கி, தொப்பம்பட்டியில் உள்ள அரசு துவக்கப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவரது மகளின் பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சி, கடந்த சில நாட்களுக்கு முன்பு பழனியில் நடைபெற்றது.
இதற்காக சரவணகுமார் தனது மனைவி, மகள் மற்றும் உறவினர்களுடன் பழனிக்குச் சென்றார். அப்போது வீட்டைப் பார்த்துக்கொள்ள, தஞ்சாவூர் ஒரத்தநாட்டை சேர்ந்த கோவிந்தராஜ் என்பவரை் காவலுக்கு பணியமர்த்தி விட்டுச் சென்றுள்ளார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு மழை பெய்ததால், காவலாளி கோவிந்தராஜ் அருகே புதிதாக கட்டப்படும் கட்டடத்தில் படுத்து தூங்கியுள்ளார்.
தொடர்ந்து நேற்று காலை எழுந்து பார்த்தபோது வீட்டின் கதவுகள் கடப்பாறையால் உடைக்கப்பட்டுள்ளதை பார்த்துள்ளார். இதனையடுத்து தகவலறிந்து சரவணகுமார் வந்து வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த சுமார் 50 சவரன் நகை, ரூ.72 லட்சம் பணம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்துள்ளது.
இதுதொடர்பாக சரவணகுமார் கொடுத்த புகாரின் அடிப்படையில், வடக்கிபாளையம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். கோவை மாவட்ட கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், பொள்ளாச்சி துணை கண்காணிப்பாளர் தமிழ்மணி தலைமையில் மூன்று தனிப்படைகள் அமைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: பால் கடையின் பூட்டை உடைத்து ரூ. 4 லட்சம் திருட்டு - சிசிடிவி உதவியுடன் போலீஸ் விசாரணை