கோயம்புத்தூர்: சார்ஜாவில் இருந்து 100-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று (ஜன 8) காலை ஏர் அரேபியா விமானம் கோவை வந்தது. அந்த விமானத்தில் வந்தவர்கள் தங்கம் கடத்தி வந்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள், 10க்கும் மேற்பட்ட பயணிகளை சந்தேகத்தின் பேரில் அழைத்துச் சென்று சோதனை நடத்தினர்.
அப்போது அந்த விமானத்தில் வந்த திருச்சி மாவட்டம் அவல் தோப்பு பகுதியை சேர்ந்த முகமது அன்சார் (24) என்பவர் அதிகாரிகளிடம் இருந்து தப்பி அவினாசி சாலையில் தப்ப முயன்றார். உடனே மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், விமான நிலையத்தில் இருந்த கால் டாக்ஸி ஒட்டுநர்கள், போலீசார் இணைந்து துரத்திச் சென்றனர்.
அப்போது சாலையில் தடுக்கி விழுந்த அவரை மடக்கிப்பிடித்தனர். இதையடுத்து மத்திய வருவாய் புலனாய்வு அதிகாரிகள், முகமது அன்சாரை அழைத்து சென்று சோதனை நடத்தினர். இதில் அவர் ஆடைக்குள் மறைத்து வைத்திருந்த 800 கிராம் கடத்தல் தங்கத்தை பறிமுதல் செய்தனர்.
இதற்கிடையில் அவருடன் வந்த மேலும் 5 பேரிடம் சோதனை நடத்தியதில், அவர்களது உள்ளாடை மற்றும் பேன்ட் பாக்கெட்டுகளில் தங்க நகைகள் மற்றும் தங்க கட்டிகளை மறைத்து வைத்து இருந்தது கண்டறியப்பட்டது. சிலர் மலக்குடலுக்குள் கேப்சூல் வடிவில் தங்க கட்டிகளை மறைத்து வைத்து இருந்ததும் கண்டறிப்பட்டது. அவர்களுக்கு வயிற்று உபாதை மருந்து கொடுத்து அந்த தங்க கட்டிகள் வெளியில் எடுக்கப்பட்டன.
மொத்தம் 6 பேரிடம் 2 கோடி மதிப்பிலான 3 கிலோ தங்க கட்டிகள் பறிமுதல் செய்யப் பட்டன. இந்த கடத்தல் தொடர்பாக சிவகங்கையை சேரந்த முத்துக் குமார் (37) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதையும் படிங்க: சாக்லேட் பவுடரில் 211 கிராம் தங்கம் கடத்தல்!