கோவை காந்தி பார்க் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன். இவர் சென்னையில் தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார். அப்போது சென்னையைச் சேர்ந்த உஷா என்ற, திருமணமான பெண்ணை காதலித்துள்ளார்.
ஐந்தரை வயதில் மகள் இருக்கும் நிலையில் உஷா தனது கணவரைப் பிரிந்து காதலனான மகேந்திரனுடன் கோவைக்கு வந்து குடியேறினார்.
கடந்த 2016ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் உஷா சொந்த வேலை காரணமாக சென்னைக்கு சென்றிருந்த நேரத்தில் மகேந்திரனிடம் தனது ஐந்தரை வயது குழந்தையை விட்டுச் சென்றிருந்தார்.
அப்போது வீட்டில் யாரும் இல்லாததைப் பயன்படுத்திக் கொண்ட மகேந்திரன், சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளார்.
இதையடுத்து மகேந்திரனை கோவை காட்டூர் காவல் நிலைய காவல்துறையினர் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இது தொடர்பான வழக்கு கோவை நான்காவது நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில் வழக்கின் தீர்ப்பு இன்று வெளியானது.
அதில் ஐந்தரை வயது சிறுமி என்றும் பாராமல் கொடூரமாக நடந்து கொண்ட மகேந்திரனுக்கு மூன்று ஆயுள் தண்டனையும் 3 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி தீர்ப்பளித்தார்.
இதை அடுத்து மகேந்திரன் மீண்டும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.