கோவை: கஞ்சா வேட்டை 2.0 ஆபரேஷனில் நூற்றுக்கும் மேற்பட்ட கஞ்சா குற்றவாளிகளை கைது செய்திருந்தனர். இதன் காரணமாக கஞ்சா விற்பனை புறநகர்ப் பகுதிகளில் குறைந்திருந்த நிலையில், மீண்டும் கஞ்சா விற்பனை மற்றும் பயன்பாடு அதிகரித்து வருவதாக வந்த தகவலையடுத்து மாவட்டம் முழுவதும் தனிப்படை போலீசார் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் சூலூர் கண்ணம்பாளையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினர் சந்தேகத்துக்கிடமான வகையில் நின்று கொண்டிருந்த, திருச்சி மாவட்டத்தைச்சேர்ந்த சத்யராஜ் என்பவரைப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.விசாரணை மேற்கொண்டதில், கஞ்சா பொட்டலங்களை தனது பாக்கெட்டில் வைத்துக்கொண்டு அங்குள்ள வடமாநில நபர்களுக்கு விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.
சத்யராஜ் கொடுத்த தகவலின் பேரில் கஞ்சா பொட்டலங்களை இவரிடம் வாங்கி மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பாபி கான் என்ற இளைஞர் தான் வேலை செய்யும் நிறுவனத்தில் உள்ள வட மாநில இளைஞர்களுக்கு விற்பனை செய்து வந்து உள்ளார்.
அவரையும் பிடித்த காவல் துறையினர் இவர்கள் இருவருக்கும் மொத்தமாக விற்பனை செய்து வந்த சூலூர் பகுதியை சேர்ந்த குமரன் என்பவரையும் கைது செய்து அவரது இருசக்கர வாகனத்தில் பதுக்கி வைத்திருந்த 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
பின்னர் மூவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: வெளிநாட்டு இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் வெளியுறவுத் துறையின் செயல்பாடுகள் இருக்கும் - அமைச்சர் முரளிதரன்