கோவை ராஜவீதி பகுதியில் உள்ள கடைகளில் குட்கா பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாக உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்தத் தகவலின்பேரில் கோவை மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை அலுவலர் தமிழ்ச்செல்வன் தலைமையிலான அலுவலர்கள் அப்பகுதியில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது ராஜவீதி, இடையர் வீதி பகுதியில் உள்ள குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 7 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 250 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் குட்காவை பதுக்கி வைத்திருந்த இரண்டு குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது. இது தொடர்பாக, குடோனின் உரிமையாளர்களான நாகாராம், பேராராம், ரஜேஷ், ஹரிஸ் தேவசி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதுகுறித்து உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் தமிழ்ச்செல்வன் கூறுகையில், ”பறிமுதல் செய்யப்பட்ட குட்கா பொருள்களை ஆய்வகத்துக்கு அனுப்பியுள்ளோம். ஆய்வுக்குப் பின் குடோன் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். அதைக் கட்ட தவறினால் அவர்களது உரிமம் ரத்து செய்யப்படும்” எனத் தெரிவித்தார்.
இதையும் படிங்க: கத்திக்குத்து... துப்பாக்கிச்சூடு - எஸ்ஐ வில்சன் உடற்கூறாய்வில் அதிர்ச்சி தகவல்