கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்த அய்யம்பாளையத்தில் உள்ள தனியார் அட்டை தயாரிப்பு நிறுவனத்தின் பதிவு ரத்துசெய்தும் செயல்பட்டுவருவதாக, கோவை மத்திய கலால் முதன்மை ஆணையாளர் அலுவலக ஜி.எஸ்.டி. அலுவலர்களுக்குப் புகார்கள் வந்தன.
இதனையடுத்து ஜி.எஸ்.டி. அலுவலர்கள் அந்த நிறுவனத்திற்குச் சென்று அதிரடியாகச் சோதனை நடத்தினர். நிறுவனம் தொடர்பான ஆவணங்களைச் சரி பார்த்தபோது அந்த நிறுவனத்தின் பதிவு 2020 ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது தெரியவந்தது.
அந்த நிறுவன வளாகத்திலேயே வேறு ஒரு பெயரில் வெற்றி விகாஸ் காகித அட்டை தயாரிப்பு நிறுவனம் செயல்பட்டுவந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இங்குத் தயாரிக்கப்படும் அட்டைகள் விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்போது அதுதொடர்பாக முறையான கணக்குகளைக் கையாள்வது இல்லை என்பதும் தெரியவந்தது.
இந்நிலையில் நிறுவனத்தின் பதிவு ரத்துசெய்யப்பட்டதிலிருந்து ஒரு கோடியே 70 லட்சம் ரூபாயும், இரண்டாவது நிறுவனத்தின் மூலம் ஒரு கோடி என மொத்தம் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நிறுவனங்களிலிருந்து பல்வேறு ஆவணங்களை அலுவலர்கள் கைப்பற்றினர். இந்த சோதனையில் ஜி.எஸ்.டி. மட்டுமல்லாமல் தொழில் வரி, சொத்து வரி உள்பட பல்வேறு வரிகளில் மோசடி செய்து இருப்பதும் தெரிய வந்தது. இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
இதையும் படிங்க: இடையன்விளையில் கடையை உடைத்து பணம், சிகரெட் கொள்ளை!