கோவை மாநகரில் போதைப்பொருட்கள் தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் கோவை மாநகர போலீசார், 10 லட்சம் மதிப்பிலான 156 கிலோ கஞ்சா சாக்லேட்கள் இன்று (பிப்.3) பறிமுதல் செய்த நிலையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தனிப்படை போலீசாருக்கு பாராட்டுகள் தெரிவித்தார்.
போதைப்பொருட்களின் பயன்பாட்டை ஒழித்து, போதைப்பொருள் இல்லாத கோவையை உருவாக்கும் பொருட்டு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் போலீசார் தீவிரமாக செயல்பட்டு வருகின்றனர். அதன் அடிப்படையில் நீலாம்பூர் பகுதியில் போதை தரக்கூடிய கஞ்சா சாக்லேட்டுகளை விற்பனைக்கு பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமலாக்க காவல் உதவி ஆய்வாளர் ராஜேஷ் கண்ணன் உள்ளிட்ட காவல்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று இன்று (பிப்.3) சோதனை மேற்கொண்டனர்.
அப்போது விற்பனைக்காக கஞ்சா சாக்லேட்டுகளை வைத்திருந்த பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் திலீப்குமார்(38) என்பவரை கைது செய்தனர். அத்தோடு, அவரிடமிருந்து 10 லட்சத்து 81 ஆயிரத்து 600 ரூபாய் மதிப்புள்ள 156 கிலோ கஞ்சா சாக்லேட்டுகளை பறிமுதல் செய்து குற்றவாளியை நீதிமன்றக் காவலுக்கு உட்படுத்தினர். இதனைப் பாராட்டும் விதமாக, கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரிநாராயணன் நேரில் சென்று தனிப்படை காவல்துறையினரை பாராட்டினார்.
புகார் எண்கள்: இதுபோன்று போதைப்பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டாலோ (அ) சட்டம் ஒழுங்கிற்கு எதிராக செயல்பட்டாலோ காவல் துறைக்கு தகவல் தெரிவிக்க பொதுமக்கள் தயங்காமல் கோவை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறை எண் 94981-81212 மற்றும் வாட்ஸ்அப் எண் 77081-00100 என்ற எண்ணிலும் அழைத்து புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இவ்வாறு தகவல் கூறுபவர்கள் குறித்த தகவல்கள் ரகசியமாக வைக்கப்படும் என மாவட்ட காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே நேரத்தில் அதிகரித்த ஃபாஸ்ட் புட் உணவங்களும் அவ்வுணவுகளினால் ஏற்படும் பாதிப்புகளும் பொதுமக்களை அச்சுறுத்தி வருகின்றன. இந்நிலையில், பொதுமக்கள் நாம் அன்றாட வாழ்க்கையில் மறந்துபோன கடலை மிட்டாய், எள்ளு உருண்டை உள்ளிட்ட இனிப்புகளையும் உடலுக்கு நன்மை செய்யும் நுங்கு, இளநீர், பனங்கிழங்கு உள்ளிட்ட இயற்கையான உணவுகளையும் குழந்தைகளிடம் உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்த வேண்டும். இதனால், துரித உணவுகளால் நேரிடும் உடல் உபாதைகள் உள்ளிட்டவைகளைத் தவிர்க்கலாம்.
இதையும் படிங்க: Chennai Robbery:சென்னையில் ஆந்திரா வியாபாரியிடம் ரூ.1.40 கோடி அபேஸ் - போலி போலீஸாருக்கு வலைவீச்சு!