கோயம்புத்தூர்: சரவணம்பட்டி அருகே சிவானந்தபுரம் யமுனா நகரில் தூய்மைப் பணியாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கிருந்த முட்புதரில் இருந்த சாக்குப்பையிலிருந்து துர்நாற்றம் வீசியிருக்கிறது. சாக்கை திறந்து பார்த்தபோது கை, கால்கள் கட்டப்பட்டு அழுகிய நிலையில் ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை பார்த்து தூய்மைப் பணியாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இதுதொடர்பாக சரவணம்பட்டி காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினருக்கு 15 வயது சிறுமியின் உடலை மீட்டனர்.
மேலும் கடந்த 13ஆம் தேதி சிறுமி காணாமல் போனதாக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டிருந்ததை காவல் துறையினர் உறுதிசெய்தனர். பின்னர் சிறுமியின் சடலத்தை மீட்டு உடற்கூராய்விற்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
சிறுமியின் உயிரிழப்பிற்கு நீதி கேட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் உடற்கூராய்வு கட்டடம் முன்பு திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினரின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். தற்போது சிறுமியின் உயிரிழப்பு குறித்து காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: VIJAY DIWAS 2021: போர் நினைவுச் சின்னத்தில் ஸ்டாலின் மரியாதை