கோவை செல்வபுரம் பாரதிநகரைச் சேர்ந்த தம்பதியினர் செல்வகுமார் (37), லட்சுமி(34). இவர்களுக்கு ராதாகிருஷ்ணன் (12) என்ற மகனும், செல்வி (6) என்ற மகளும் உள்ளனர். இருவரும் தனியார் பள்ளியில் படித்து வருகின்றனர். ராதாகிருஷ்ணன் 7ஆம் வகுப்பு படித்து வந்த நிலையில், செல்போனில் வீடியோ கேம் விளையாடுவதை பொழுதுபோக்காக கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து சிறுவன் ராதாகிருஷ்ணன் செல்போனை பயன்படுத்தி நீண்ட நேரம் வீடியோ கேம் விளையாடுவதை, அவரது தாய் லட்சுமி கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த சிறுவன், வீட்டிலுள்ள படுக்கை அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.
ராதாகிருஷ்ணன் நீண்ட நேரமாகியும் அறையை விட்டு வெளியே வராததால், பெற்றோர் உள்ளே சென்று பார்த்தபோது, அவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது. இந்த சம்பவம் தொடர்பாக செல்வபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். தாய் கண்டித்ததால் சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: முன்விரோதம் காரணமாக ஆட்டோ ஓட்டுனர் கொலை