சென்னை: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் மண்டலக் குழுத் தலைவர்களை தேர்வு செய்வதற்கான மறைமுகத் தேர்தல் இன்று (மார்ச் 30) காலை 9.30 மணிக்கு சென்னை ரிப்பன் மாளிகை மன்ற அரங்கில் தொடங்கியது.
மாவட்டத் தேர்தல் நடத்தும் அலுவலரும், மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி தலைமையில் இத்தேர்தல் நடைபெற்றது. இதில் 15 மண்டலங்களில் 14 மண்டலங்களில் திமுக வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். பெருங்குடி மண்டலத்தில் தேர்தல் நடைபெற்று திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார்.
தேர்வு செய்யப்பட்ட திமுக வேட்பாளர்கள்
மண்டல எண் | மண்டலம் | வேட்பாளர் பெயர் |
1 | திருவொற்றியூர் | தி.மு. தனியரசு (வார்டு 10) |
2 | மணலி | ஏ.வி. ஆறுமுகம் (வார்டு 20) |
3 | மாதவரம் | எஸ். நந்தகோபால் (வார்டு 25) |
4 | தண்டையார்பேட்டை | நேதாஜி யு.கணேசன் (வார்டு 38) |
5 | ராயபுரம் | பி. ஸ்ரீராமுலு (வார்டு 54) |
6 | திரு.வி.க நகர் | சரிதா மகேஷ்குமார் (வார்டு 69) |
7 | அம்பத்தூர் | பி.கே.மூர்த்தி (வார்டு 80) |
8 | அண்ணா நகர் | கூபி . ஜெயின் (வார்டு 94) |
9 | தேனாம்பேட்டை | எஸ். மதன்மோகன் (வார்டு 114) |
10 | கோடம்பாக்கம் | எம்.கிருஷ்ணமூர்த்தி (வார்டு 142) |
11 | வளசரவாக்கம் | வே.ராஜன் (வார்டு 143) |
12 | ஆலந்தூர் | என். சந்திரன் (வார்டு 166) |
13 | அடையாறு | ஆர். துரைராஜ் (வார்டு 172) |
15 | சோழிங்கநல்லூர் | வி.இ.மதியழகன் (வார்டு 192) |
மொத்தமுள்ள 15 மண்டலங்களில் 14 மண்டலங்களுக்கு திமுக வேட்பாளர்களைத் தவிர வேறுயாரும் வேட்புமனு தாக்கல் செய்யாததால், அவர்கள் போட்டியின்றி தேர்வானதாக அறிவிக்கப்பட்டனர்.
11 உறுப்பினர்களைக் கொண்ட பெருங்குடி 14ஆவது மண்டலத்திற்கு, திமுக சார்பில் எஸ்.வி. ரவிச்சந்திரன் (வார்டு 184), அதிமுக சார்பில் கே.பி.கே.சதீஷ்குமார் (வார்டு 182) இருவரும் மண்டலக் குழுத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ததால் வாக்குச்சீட்டு முறைப்படி தேர்தல் நடைபெற்றது.
அதன் முடிவில் திமுக வேட்பாளர் எஸ்.வி. ரவிச்சந்திரன் மொத்தமுள்ள 11 வாக்குகளில், 8 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மொத்தம் 15 மண்டலக் குழுத் தலைவர்களில் 14 பேர் ஆண் மண்டலத் தலைவர்கள். ஒரே ஒரு மண்டலத்தில் மட்டும் பெண் மண்டலத் தலைவியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஒரே ஆட்டோவில் 25 குழந்தைகள் - பள்ளி நிர்வாகத்தை கண்டிக்கும் பெற்றோர்