சென்னை பெருநகர காவல் நிலைய சரகத்தில் பொது இடங்களில் பொதுமக்களுக்கு, முக்கியமாக பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும்; பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்ளும் நபர்களின் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் எனவும் காவல் ஆணையாளர் மகேஷ் குமார் அகர்வால் உத்தரவிட்டதைத் தொடர்ந்து, மாவட்ட துணை ஆணையர் விக்ரமன் அறிவுரைகளின்படி, கடற்கரைகள் அதிகமாக இருக்கும் பகுதிகளான அடையாறு, நீலாங்கரை, திருவான்மியூர் போன்ற பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதிகளில், அங்கு குற்றம் நடைபெறாமல் இருக்க ரோந்து வாகனங்கள் மூலம் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது .
இந்நிலையில் சாஸ்திரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எலியட்ஸ் பீச் கடற்கரைப் பகுதியில் விடுமுறை நாள்கள், மாலை நேரங்களில் பொழுதுபோக்கிற்காகவும், உடற்பயிற்சிக்காகவும் ஆண்கள், பெண்கள் பலர் வந்து செல்கின்றனர். பெசன்ட் நகர் பகுதியில் Prank என்ற பெயரில் ஆபாசமாகப் பெண்களை நேர்காணல் செய்வதுபோல், நகைச்சுவையைத் தூண்டிவிட்டு, அவர்களை ஆபாசமாகப் பேச வைத்து, அதை வீடியோவாகப் பதிவு செய்து, அதை யூ-ட்யூப் சேனலில் பதிவிடுவதாக காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
தகவலின்படி ரோந்து உதவி ஆய்வாளர் முருகன், தலைமை காவலர் சண்முகசுந்தரம் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு இரு இளைஞர்கள் மைக், கேமராவைக் கொண்டு பெண்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று, அவர்களை நேர்காணல் எடுப்பது, அதைத் தட்டிக்கேட்கும் பொதுமக்களை ஆபாசமாகப் பேசி மிரட்டுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு கொண்டிருந்ததையும் பார்த்துள்ளனர். அத்தகைய மிரட்டல் செயல்களில் ஈடுபட்ட இருவரையும் கைது செய்த காவல் துறையினர் சாஸ்திரி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர்கள் நல்லூர் பஜனை கோயில் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (31) என்பதும், அவர் யூ-ட்யூப் சேனலை 2019ஆம் ஆண்டிலிருந்து நடத்தி வந்ததும், அதில், நீலாங்கரை செங்னியம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த ஆசின் பத்சா (23) என்ற இளைஞர் தொகுப்பாளராகவும், பெருங்குடி சீவரம் பகுதியைச் சேர்ந்த அஜய் பாபு (24) என்பவர் கேமரா மேனாகவும் பணிபுரிந்து வந்ததும் தெரியவந்தது.
இவர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான பீச், பார்க் போன்ற பகுதிகளுக்குச் சென்று, அங்கு வரும் காதலர்கள், இளம் பெண்களை குறிவைத்து கேளிக்கையாகப் பேசி வீடியோ பதிவு செய்வதோடு, பெண்களை ஆபாசமாக காட்டும் வகையிலும் பதிவு செய்து, பின்னர் அதில் ஆபாசமாக மற்றும் அநாகரிகமாகப் பேசும் வார்த்தைகளை மட்டும் கோர்வை செய்து, தங்களது யூ-ட்யூப் சேனலில் வெளியிட்டிருக்கிறார்கள்.
அந்த வகையில் சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடியோக்களைப் பதிவு செய்துள்ளதும்; அதை 7 கோடி மக்கள் இதுவரை பார்த்துள்ளதும் தெரியவந்தது. மேலும், தங்களுக்குத் தெரிந்த பெண்களை பொதுமக்கள்போல் குறிப்பிட்ட இடத்திற்கு வரவழைத்து பொதுமக்கள் முன்னிலையில், யதார்த்தமாக நேர்காணல் எடுப்பதுபோல முதலில் பேச வைப்பதும்; அதை வைத்து மற்ற இளைஞர்களைப்பேச வைத்து அருவெறுக்கத்தக்க வகையில் வீடியோ பதிவுகளை செய்து வந்ததும் விசாரணையில் தெரியவந்தது.
இதனையடுத்து யூ-ட்யூப் உரிமையாளர் உள்பட மூன்று பேரையும் கைது செய்த காவல் ஆய்வாளர் பலவேசம், அவர்கள் மூன்று பேரின் மீதும் 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்தார். மேலும், இந்த யூ-ட்யூப் சேனலை முடக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்தகைய அநாகரிகமான செயல்களில் யாரேனும் ஈடுபடுவதாக தெரிய வந்தால், அவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
மேலும், பொது இடங்களில் இதுபோன்ற செயல்களில் யாரேனும் ஈடுபடுவதை பொதுமக்கள் கண்டால் தன்னுடைய தனிப்பட்ட தொலைபேசி எண் (8754401111) என்ற எண்ணில் புகார் அளிக்கலாம் என அடையாறு துணை ஆணையாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.