சென்னையில் உள்ள கடற்கரைகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் மாணவர்களிடம் ஆபாசமாக பேட்டி எடுத்து அதை யூடியூப் சேனலில் பதிவேற்றம் செய்து வந்ததாக கடந்தாண்டு வீஜே ஆசன் மற்றும் தினேஷ் ஆகியோரை காவல் துறையினர் கைது செய்தனர்.
பின்னர் பொது இடங்களில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஆபாசமான கேள்விகளை கேட்டு, அதை யூடியூப் சேனலில் பதிவிடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை காவல் துறை ஏற்கனவே எச்சரித்திருந்தது. ஆனால் இதனை மீறி 'Veera talks' என்ற யூடியூப் சேனலில், பெண் தொகுப்பாளர் ஒருவர் பொது இடங்களில் ஆபாசமான கேள்வி கேட்டு அதை யூடியூப் சேனலில் பதிவேற்றி வந்தனர். இந்த வீடியோ முகம்சுழிக்கும் வகையில் இருப்பதாக பலர் கமெண்டுகளை பதிவிட்டு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று (டிச.23) சென்னை மெரினா கடற்கரை லூப் சாலையில் ‘veera talks’ யூடுயூப்பைச் சேர்ந்த பெண் தொகுப்பாளர் கல்லூரி மாணவர்களிடம் ஆபாசமான கேள்விகளை கேட்டு பேட்டி எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. அப்போது அதை கண்ட வழக்கறிஞர் ஒருவர் பெண் தொகுப்பாளர் மற்றும் கேமராமேன் ஆகியோரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, அவ்வழியாக வந்த ரோந்து காவலர்களிடம் அவர்களை பற்றி கூறியுள்ளார்.
இதையடுத்து அவர்களிடம் கேமராவை பறிமுதல் செய்த காவல் துறையினர், மெரினா காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதன் பின்னர் இனிமேல் இது போன்ற ஆபாசமான கேள்விகளை மாணவர்களிடம் கேட்கக்கூடாது எனவும் ஆபாசமான பேட்டிகளை யூடியூப் சேனலில் இருந்து நீக்க வேண்டுமெனவும் கூறி எச்சரித்து இருவரிடமும் எழுதி வாங்கி கொண்டு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: விஜய் சேதுபதி - கத்ரினா கைஃப் இணையும் படத்துக்கு ‘மேரி கிறிஸ்துமஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது