சென்னை: கே கே நகர் 10ஆவது செக்டர் பகுதியிலுள்ள 3 தெருக்களில் வசிக்கும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்தி வைப்பது வழக்கம். அதேபோல் நேற்று (செப்டம்பர் 13) இரவும் மக்கள் தங்களது வாகனங்களை சாலையோரம் நிறுத்து வைத்துள்ளனர்.
கத்தியுடன் வலம் வந்த இளைஞர்கள்
இந்நிலையில், அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் சென்ற அடையாளம் தெரியாத 3 நபர்கள், கஞ்சா போதையில் சாலையோரம் நின்றிருந்த வாகனங்களை அடித்து நொறுக்கியுள்ளனர்.
மேலும், அந்த கும்பல் இரண்டடி நீளமுள்ள கத்தியுடன் சாலையில் வலம் வந்துள்ளனர். இதை கண்ட பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடித்துள்ளனர். இதனை வீட்டு ஜன்னல் வழியாக பார்த்த குடியிருப்பு வாசிகள் அச்சத்தில் ஜன்னல் கதவை பூட்டியுள்ளனர்.
பின்னர் இது குறித்து பொதுமக்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர். புகாரின் அடிப்படையில் கே.கே நகர் காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர்.
சி.சி.டி.வி கொண்டு ஆய்வு
காவல் துறையினர் வருவதை கண்ட போதை ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து சம்பவயிடத்தில் பதிவான சி.சி.டி.வி காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர்.
அப்போது 3 பேர் கொண்ட கும்பல் இச்சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும், அந்த கும்பல் கத்தியுடன் சாலைகளில் நடந்து செல்லும் காட்சி தெளிவாக பதிவாகி இருந்தது.
உடனடியாக தியாகராய நகர் துணை ஆணையர் ஹரி கிரண் பிரசாத் சம்பவயிடத்திற்கு நேரில் சென்று விசாரணை மேற்கொண்டார்.
விசாரணை
விசாரணையில் இதே கும்பல் விருகம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ஆழ்வார்த்திருநகர் பகுதியில் வரிசையாக நிறுத்தப்பட்டிருந்த 10 க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களை அடித்து நொறுக்கியது தெரியவந்தது.
மேலும், அப்பகுதியில் பால் வியாபாரம் செய்யும் ஒருவரை சரமாரியாக வெட்டி விட்டு சென்றதும், வளசரவாக்கத்தில் அட்டகாசத்தில் ஈடுபட்டதுடன், துரித உணவகத்தில் வேலை பார்க்கும் ஒருவரையும் சரமாரியாக வெட்டி காயப்படுத்தியது தெரியவந்தது.
இதையடுத்து இச்சம்பவத்தில் தொடர்புடைய விருகம்பாக்கத்தை சேர்ந்த ராஜேஷ் என்கிற திருட்டு ராஜேஷ், ஆதி ஆகிய இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். இதனைத்தொடர்ந்து தலைமறைவாக உள்ள ஒருவரை காவல் துறையினர் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: சம்பள பணம் பிரிப்பதில் தகராறு - சமையல் தொழிலாளி கொலை