சென்னை: வடசென்னைக்குட்பட்ட புதுவண்ணாரப்பேட்டை, வண்ணாரப்பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை, உள்ளிட்ட பகுதிகளில் கடந்த வாரங்களில் போதை பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு, விற்பனையில் ஈடுபட்டவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், வண்ணாரப்பேட்டை காவல் எல்லை உட்பட்ட கிழக்கு கல்லறை சாலையில் அமைந்துள்ள கல்லறை பகுதியில் போதை ஆசாமிகளின் அட்டூழியங்கள் அதிகரித்துள்ளதாக, பொதுமக்கள் வண்ணாரப்பேட்டை காவல் ஆய்வாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
நாள்முழுவதும் உல்லாசம்: அதன் பேரில், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் பிரான்வின் டேனி தலைமையிலான காவல்துறையினர், அப்பகுதியில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அங்கு சில இளைஞர்கள், தங்களது உடம்புக்குள் ஊசி மூலம் போதை மருந்தை செலுத்திக்கொண்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்களை காவல்நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், ஆந்திரா மாவட்டம் சித்தூரில் இருந்து மலிவு விலையில் போதை மாத்திரைகளை வாங்கிவந்து, அதனை மருந்தகங்களில் கிடைக்கும் வலிநிவாரணி மாத்திரையுடன் கரைத்து, ஊசிகள் மூலம் உடம்பில் ஏற்றி, போதை தலைக்கேறி நாள்முழுவதும் உல்லாசமாக இருந்து வருவது தெரியவந்தது. மேலும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.
ஆறு பேர் கைது: இதில் ஈடுபட்ட சேத்பட்டு பகுதியை சேர்ந்த ஸ்டாலின், பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சையது அசார், கிழக்கு கல்லறை சாலை பகுதியை சேர்ந்த உதயகுமார் என்கிற கோழி உதயா, பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சந்தோஷ், வினோத், கார்த்திக் ஆகிய ஆறு பேரையும் கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து போதை மாத்திரைகள் மற்றும் அவர்கள் போதைக்கு பயன்படுத்திய ஊசிகளையும் பறிமுதல் செய்தனர். இவர்கள் ஆறு பேர் மீதும் போதை தடுப்பு பிரிவின் கீழ் மூன்று வழக்குகள் பதிவு செய்து, நீதிமன்றம் முன் நிறுத்தி, சிறையில் அடைத்தனர்.
நாளுக்கு நாள் வடசென்னை பகுதியில் போதை மாத்திரைகள், பவுடர்கள், கஞ்சா வஸ்துக்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கும் நிலையில், காவல் துறையினரும் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு கைது செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இருந்தபோதிலும் இதனை நிரந்தரமாக தடுக்கவும், இளைஞர்களையும் இளம் சமுதாயத்தினரையும் காப்பாற்றி நல்வழி படுத்தவும், அரசு வழிவகை செய்யவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: நண்பர்களுக்கு போதைப்பொருள்கள் விநியோகம் - பட்டதாரி இளைஞர் கைது