சென்னை: தாம்பரம் அடுத்த சேலையூர் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (25) எலக்ட்ரீசியனாக வேலைபார்த்து வருகிறார். நேற்று (மே 31) இரவு வழக்கம் போல் பணியை முடித்துவிட்டு வீட்டின் அருகே தனது நண்பர்களுடன் பேசி கொண்டிருந்தபோது ஆறு இருசக்கர வாகனங்களில் கஞ்சா போதையில் ஹெல்மெட் அணிந்து வந்த 12 பேர் கொண்ட மர்ம கும்பல் கிருஷ்ணமூர்த்தியிடம் புகைபடம் ஒன்றை காட்டி இவரை தெரியுமா என்று கேட்டுள்ளனர்.
அதற்கு தெரியாது என்று பதலளித்த போது அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை வைத்து அவரை தாக்கியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்து அங்கு இருந்தவர்கள் சிதறி ஓடியுள்ளனர், பின்னர் இதனை தட்டி கேட்க வந்த அப்பகுதியை சேர்ந்தவர்களை கண்மூடி தனமாக தாக்கிவிட்டு சாலையில் கத்தியை வைத்து தேய்த்து கொண்டே சென்று அராஜாகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனால் பதறிய அப்பகுதிமக்கள் தங்களின் வீடுகளுக்குள் சென்று தஞ்சம் அடைந்துள்ளனர், மேலும் படுகாயம் அடைந்த கிருஷ்ணமூர்த்தியை மீட்ட நண்பர்கள் சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர், இது குறித்து சேலையூர் காவல் நிலையத்தில் தகவல் அளிக்கபட்டது. சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வருவதை கண்ட மர்ம நபர்கள் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்றுள்ளனர்.
இதனையடுத்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அந்த மர்ம நபர்கள் யாரை ,கொலை செய்வதற்காக புகைபடத்துடன் வலம் வருகிறார்கள் என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரனை மேற்கொண்டனர். விசாரணையில் கிழக்கு தாம்பரத்தை சேர்ந்த ராஜ்மோகன்(22), அப்பு என்கிற விக்னேஷ்(23) என தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை கைது செய்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். கடந்த 3 நாட்களுக்கு முன்பு விக்னேஷ் கணபதிபுரம் பகுதிக்கு சென்றபோது இருசக்கர வாகன விபத்து ஏற்பட்டுள்ளது அப்போது அப்பகுதியை சேர்ந்த நபர்கள் விக்னேஷை சரமாரியாக அடித்துள்ளனர்.
இதன் காரணமாகவே அடித்தவர்களை பழிவாங்குவதற்காக கத்தியுடன் சென்று ரகளையில் ஈடுபட்டதும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் இருவர் மீது வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர், மேலும் பத்து பேரை தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: எஸ்பிஐ வங்கி அலுவலர் பேசுவதாக கூறி ஆசிரியரிடம் ரூ.3.24 லட்சம் மோசடி