திருவள்ளூர் மாவட்டம் மாந்திப்பை கிராமத்தைச் சேர்ந்தவர் சம்பத்குமார்(24). இவர் சென்னை, வேளச்சேரியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார். இதற்கிடையில், சம்பத்குமாருக்கு நேற்று பிறந்த நாளாகும். பிறந்தநாளன்று அவர் தனது நண்பர் நரேந்திரன் (31) என்பவருடன் திருநின்றவூர் ஓம்சக்தி நகரில் உள்ள ஆசிரமத்தில் உள்ள குருஜியிடம் ஆசிர்வாதம் வாங்கச் சென்றார்.
அப்போது குருஜி குடியிருப்பில் உள்ள கழிவுநீர் தொட்டியில் அடைப்பு உள்ளது எனக் கூறியுள்ளார். இதனால் சம்பத்குமார், நரேந்திரன் ஆகிய இருவரும் அடைப்பைச் சரி செய்வதாக கூறியுள்ளனர். இந்நிலையில் கழிவுநீர் தொட்டியில் முதலில் இறங்கிய நரேந்திரன் விஷவாயு தாக்கி தொட்டிக்குள் மயங்கி விழுந்துள்ளார். இதனை அறியாத சம்பத்குமார், தொட்டியுள்ளே இறங்கி அவரை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது அவரையும் விஷவாயு தாக்கியதில் மயங்கி விழுந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து இருவரையும் மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.
இதில் சம்பத்குமார் விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி பரிதாபமாக இறந்தார். உயிருக்கு போராடிய நரேந்திரனை மீட்டு சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர். அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருநின்றவூர் காவல்துறையினர் சம்பத்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதனைத்தொடர்ந்து, இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து காவல் ஆய்வாளர் குணசேகரன் தலைமையில் காவல்துறையினர் குருஜியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்