சென்னை - மாதவரம் பொன்னியம்மன் நகரைச் சேர்ந்தவர், கருப்பசாமி (26). இவர் வியாசர்பாடி பெரியார் நகர், ராஜாங்கம் தெருவில் உள்ள எஸ்பி ஏஜென்சிஸ் நிறுவனத்தில் ஆட்டோ ஓட்டுநராகப் பணிபுரிந்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று (ஜுன்.08) மாலை கருப்பசாமி நிறுவனத்தின் வெளியே ஆட்டோவில் பொருட்களை ஏற்றிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென அங்கு வந்த இளைஞர் ஒருவர் தான் கையில் வைத்திருந்த பட்டாக்கத்தியால் கருப்பசாமியை முதுகில் வெட்டிவிட்டு, ஆட்டோவின் கண்ணாடியையும் உடைத்தார்.
பின்னர், அருகில் இருந்த இறைச்சிக் கடைக்குச் சென்று கண்ணாடிகளை கத்தியால் உடைத்து மிரட்டி விட்டுச் சென்றார். மேலும் தெருவில் சென்ற நபர்களிடம் கத்தியைக் காட்டி விரட்டினார். இதுகுறித்து அங்கிருந்த பொதுமக்கள் செம்பியம் ரோந்து காவலருக்குத் தகவல் அளித்தனர்.
இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு காவல் துறையினர் விரைந்து சென்றனர். அப்போது,காவல் துறையினரை பார்த்தவுடன் இளைஞர் தப்பியோட முயன்ற போது, அவரை காவல் துறையினர் வளைத்து பிடித்தனர்.
இதனையடுத்து, அந்த நபரிடம் விசாரணை நடத்தியபோது, அதே பகுதியைச் சேர்ந்த மகேஷ் என்பதும், குடிபோதையில் பட்டாக்கத்தியால் வெட்டியதும் தெரியவந்தது.
மேலும் அவரிடம் நடத்திய விசாரணையில் மகேஷ் மீது செம்பியம், திருவிக நகர், சோழவரம் ஆகிய காவல் நிலையங்களில் பல்வேறு அடிதடி குற்ற வழக்குகள் நிலுவையில் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அவர் மீது வழக்குபதிவு செய்த காவல்துறையினர் ரகளை சம்பவம் தொடர்பாக அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மகேஷ் அங்குள்ள கடைகளில் ரகளையில் ஈடுபட்டு கண்ணாடிகளை உடைத்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: ஹோமியோபதி மருத்துவர் மீது பாலியல் புகார்!