சென்னை: Youth killed in Vyasarpadi: வியாசர்பாடி தேவர் நகர் பத்தாவது தெருவைச் சேர்ந்தவர், சூர்யா (வயது 32). இவர் அதே பகுதியில் தனியாக வீடு எடுத்து வசித்து வந்தார். இவருக்கு மதுப்பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று (டிச.28) மாலை சூர்யாவின் சகோதரர் விஜயகாந்த் அவரை பார்க்க சூர்யாவின் வீட்டிற்குச் சென்றுள்ளார். அப்போது தலையில் பலத்த காயத்துடன் மயக்க நிலையில் சூர்யா இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக அவரை மீட்டு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதித்தார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இதற்கிடையில் இந்தச் சம்பவம் சம்பவம் தொடர்பாக எம்கேபி நகர் காவல் துறைக்கு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த சூர்யா சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
எம்கேபி நகர் காவல்துறை, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். அப்போது சம்பவம் நடந்த நாளன்று (நேற்று) காலை சூர்யா வீட்டிற்கு பாரிமுனை ஆதித்தன்நாயக்கன் தெருவைச் சேர்ந்த முரளிகிருஷ்ணன் (37) மற்றும் தினேஷ் ஆகிய இரண்டு நபர்கள் வந்துள்ளனர்.
அவரது வீட்டிலேயே மூன்று பேரும் மது அருந்தியுள்ளனர். அப்போது இவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த முரளிகிருஷ்ணன் அங்கிருந்த சுத்தியலை எடுத்து சூர்யாவைத் தாக்கியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பாரிமுனையில் பதுங்கி இருந்த முரளிகிருஷ்ணனை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
முரளிகிருஷ்ணன் மீது கொத்தவால்சாவடி காவல் நிலையத்தில் கொலை வழக்கும், எம்கேபி நகர், கொருக்குப்பேட்டை காவல் நிலையங்களில் குற்ற வழக்குகளும் நிலுவையில் உள்ளன என்பதும் தெரியவந்துள்ளது.
இதையும் படிங்க: 'செந்தில் பாலாஜியை எனக்குத் தெரியும், பட் அவருக்கு தான் என்ன தெரியாது' - ட்விஸ்ட் வைத்த மோசடிப் பெண்