சென்னை பரங்கிமலை ரயில் நிலையத்தில் நேற்று(அக் - 13) கல்லூரி மாணவி ஓடும் ரயில் முன் தள்ளிவிடப்பட்டு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பயணிகள் அளித்த தகவலின் பேரில் சம்பவயிடத்திற்கு விரைந்த ரயில்வே போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், கொல்லப்பட்ட மாணவி ஆதம்பாக்கம் ராஜா தெருவில் உள்ள காவலர் குடியிருப்பில் வசிக்கும் பெண் தலைமை காவலர் ராமலட்சுமியின் மகள் சத்யா (20) என்பதும், அவர் தியாகராய நகரில் உள்ள தனியார் கல்லூரியில் பி.காம் இரண்டாமாண்டு படித்து வந்ததும் தெரியவந்தது.
மேலும், அவரை ரயில் முன் தள்ளிவிட்டு கொலை செய்த இளைஞர் அதே பகுதியில் உள்ள குடியிருப்பில் அந்த பெண்ணுக்கு எதிர்வீட்டில் வசிக்கும் ஓய்வுபெற்ற உதவி ஆய்வாளர் தயாளன் என்பவரது மகன் சதீஷ் (29) என்பதும் தெரியவந்தது. குறிப்பாக சதீஷ் பள்ளிப் பருவம் முதலே சத்யாவை காதலித்து வந்துள்ளார். அதனையேற்காததால் சத்யாவுக்கு தொடர்ந்து பல்வேறு விதமாக தொல்லை கொடுத்து வந்துள்ளார். அந்த வகையில் 4 மாதத்திற்கு முன் ஏற்பட்ட பிரச்சனையில் சதீஷ், சத்யாவை கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் சத்யாவின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இந்த நிலையில், சத்யாவிற்கு திருமணம் பேசி முடிக்க அவரது பெற்றோர் தீர்மானித்துள்ளனர். இதுகுறித்து சதீஸ் நேற்று மதியம் கல்லூரி செல்ல ரயிலுக்காக காத்திருந்த சத்யாவிடம் வாக்குவாதம் செய்துள்ளார். அப்போது கோபமடைந்த சதீஷ் ரயில் முன் தள்ளிவிட்டு சத்யாவை கொலை செய்துள்ளார் என்பது தெரியவந்தது.
அதன்பின் தப்பியோடிய சதீஷைப் பிடிக்க மாம்பலம் ரயில்வே போலீசார் மற்றும் புனித தோமையார் மலை போலீசார் மூலம் 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. அப்போது நள்ளிரவில் சதீஷின் செல்போன் சிக்னல் ஈ.சி.ஆர் பகுதியை காட்டியுள்ளது. அதனடிப்படையில் 5 தனிப்படை போலீசார் ஈ.சி.ஆர் பகுதியை சுற்றி 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு தேடுதல் வேட்டையைத் தீவிரப் படுத்தினர். அப்போது சதீஷ் சுற்றிவளைத்து கைது செய்யப்பட்டார். அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டுவருகிறது.
முதல்கட்ட விசாரணையில், சத்யாவை கொலை செய்துவிட்டு தானும் தற்கொலை செய்துகொள்ள சதீஸ் திட்டமிட்டுள்ளார். ஆனால், சத்யாவை ரயில் முன் தள்ளிவிட்ட பின் பயணிகள் கூச்சலிடவே பயந்துபோய் தப்பியோடியுள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதனை வாக்குமூலமாக அவர் தெரிவித்துள்ளார். இதற்கிடையே கொலை செய்யப்பட்ட சத்யாவின் தந்தை மாணிக்கம் திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது உயிரிழந்தார். அவரது உடலும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:காதல் விவகாரம் - இளம்பெண் ரயிலில் தள்ளிவிட்டு கொலை