சென்னை அம்பத்தூரில் வீடு, கடைகள் முன்னர் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்களை அடையாளம் தெரியாத நபர்கள் திருடிச் சென்றனர். இந்த வாகனத் திருட்டு குறித்து அம்பத்தூர் காவல் நிலையத்துக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதனையடுத்து ஆய்வாளர் பெரியதுரை தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடைபெற்றது.
மேலும் திருடுபோன இடங்களில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான உருவத்தை வைத்து திருட்டில் ஈடுபட்ட நபர்களைத் தீவிரமாக தேடிவந்தனர். இந்நிலையில் நேற்று முன்தினம் (ஜூன்.3) காலை அம்பத்தூர் - செங்குன்றம் நெடுஞ்சாலை, புதூர் பகுதியில் காவல் துறையினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த நபரிடம் காவல் துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஓட்டி வந்த இருசக்கர வாகனத்திற்கு எந்த ஆவணமும் இல்லை என்பது தெரிய வந்தது.
தொடர்ந்து முன்னுக்குப்பின் முரணான தகவல்களை காவலர்களிடம் அவர் தெரிவித்தார். இதனையடுத்து அவரை அம்பத்தூர் காவல் நிலையம் கொண்டு வந்து தீவிர விசாரணை நடத்தினர்.
விசாரணையில் பிடிபட்ட நபர் அம்பத்தூர் கள்ளிக்குப்பம் கிருஷ்ணம்மாள் தெருவைச் சேர்ந்த ஜோசப் (21) என்பது தெரிய வந்தது. இவர் ஆன்லைன் நிறுவனம் மூலம் உணவு விநியோகம் செய்யும் நிறுவனத்தில் ஊழியராகப் பணியாற்றியதும், தொடர்ச்சியாக இருசக்கர வாகனத் திருட்டில் ஈடுபட்டதும் தெரியவந்தது. ஜோசப் கொடுத்த தகவலின் அடிப்படையில், திருடி வைக்கப்பட்டிருந்த ஏழு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் ஜோசப் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிங்க : ரயில் நிலையத்தில் சிக்கிய 35 லட்சம் ரூபாய்