சென்னை கும்மிடிப்பூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சவுந்தர் (27). இவர் தனியார் எரிவாயு முகமை நிறுவனத்தில் (கேஸ் ஏஜென்சி கம்பெனி) சிலிண்டர் டெலிவரி செய்யும் வேலை செய்துவருகிறார். இவர் அதே பகுதியில் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவி ஜானகி (19) என்பவரை இரண்டு ஆண்டுகளாகக் காதலித்துவந்தார்.
பின்னர் நாளடைவில் இருவரும் உல்லாசமாக இருந்துவந்துள்ளனர். இதன் காரணமாக ஜானகிக்கு குழந்தை உண்டாகி எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று ஜானகிக்கு வயிறு வலி ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து சவுந்தர் ஜானகியை அழைத்துக்கொண்டு யாருமில்லாத காட்டுப்பகுதிக்குச் சென்று செல்போனில் யூ-ட்யூப் மூலம் பிரசவம் பார்ப்பது எப்படி எனத் தெரிந்துகொண்டு ஜானகிக்கு பிரசவம் பார்த்துள்ளார்.
அப்போது குழந்தையை வெளியே எடுக்கும்போது கையை மட்டும் வேகமாகப் பிடித்து இழுத்துள்ளார். இதனால் ஜானகியின் உடல் நிலை மோசமாகி உயிருக்குப் போராடிவந்திருக்கிறார். இதைக்கண்டு பதற்றமடைந்த சவுந்தர் உடனடியாக ஆர்.எஸ்.ஆர்.எம். அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
பின்னர் ஜானகிக்கு சிகிச்சைப் பார்த்த மருத்துவர்கள் இறந்த நிலையில் குழந்தையை வெளியே எடுத்தனர். மேலும் ஜானகியை தீவிர சிகிச்சைப் பிரிவில் வைத்து மருத்துவர்கள் சிகிச்சை அளித்துவருகின்றனர். தவறான சிகிச்சை அளித்த சவுந்தரை, மருத்துவமனை நிர்வாகம் அளித்த தகவலின்பேரில் கும்மிடிப்பூண்டி காவல் துறையினர் கைதுசெய்து அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க: நர்ஸ் பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்துவிட்டதா?