சென்னை: நுங்கம்பாக்கத்தில் ரயில் முன் விழுந்து இளைஞர் தற்கொலை செய்தது தொடர்பாக வழக்கறிஞர் மீது காவல்துறையினருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.
சென்னை அமைந்தகரை பி.பி தோட்டத்தை சேர்ந்தவர் லட்சுமணன் (25). மதுரையை பூர்வீகமாக கொண்ட பட்டதாரி இளைஞரான இவர், அம்பத்தூரில் உள்ள இரும்பு நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார்.
சில மாதங்களுக்கு முன்பு செகன்ட் ஹேண்ட் மொபைல் ஒன்றை லெட்சுமணனின் தாய் அவரின் பயன்பாட்டிற்கு வாங்கிக்கொடுத்துள்ளார்.
இந்த நிலையில், கடந்த 6ஆம் தேதி புளியந்தோப்பு போலீசார் லட்சுமணனின் வீட்டுக்குச் சென்று, நீங்கள் பயன்படுத்தும் மொபைல்போன் திருட்டு மொபைல் எனவும், அதனால் விசாரணைக்காக புளியந்தோப்பு காவல் நிலையம் வருமாறும் கூறிவிட்டு சென்றுள்ளனர்.
இதனையடுத்து கடந்த 7ஆம் தேதி (புதன்கிழமை) லட்சுமணன் மற்றும் அவரது வழக்கறிஞர் யோகேஸ்வரன் ஆகிய இருவரும் புளிந்தோப்பு காவல் நிலையத்துக்கு விசாரணைக்காக சென்றுள்ளனர். விசாரணையில் தனக்கு மொபைல் பற்றி எந்த விவரங்களும் தெரியாது எனவும், சில மாதங்களுக்கு முன்பாக இந்த மொபைலை ஒரு பெண்ணிடமிருந்து தனது தாய் வாங்கி கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
போலீசார் மொபைல் விற்ற பெண்ணின் வீட்டை காட்டும்படி லட்சுமணனை அழைத்து சென்றபோது, அந்த பெண் சில மாதங்களுக்கு முன்பே வீட்டை காலி செய்திருப்பது தெரியவந்தது. போலீசார் அந்தப் பெண் குறித்த விவரங்கள் தேவைப்படும்போது நீங்கள் விசாரணைக்காக காவல்நிலையம் வரவேண்டும் என தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், கடந்த 8ஆம் தேதி மாலை லட்சுமணன் நுங்கம்பாக்கத்தில் மின்சார ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டார்.
இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த எழும்பூர் ரயில்வே போலீசார், லட்சுமணனின் தற்கொலைக்கு காரணம் என்ன என்பது குறித்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
போலீசாரின் விசாரணையில் புளியந்தோப்பு காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக சென்ற லட்சுமணன், தனது வழக்கறிஞரான யோகேஸ்வரன் என்பவரை அழைத்துச் சென்றுள்ளனர். பின்பு விசாரணை முடிந்து லட்சுமணனும் அவரது வழக்கறிஞரும் வீட்டிற்கு திரும்பிய நிலையில், பீஸாக ரூபாய் 50,000 பணத்தை வழக்கறிஞர் யோகேஸ்வரன் லட்சுமணனின் குடும்பத்தாரிடம் இருந்து பெற்றுக் கொண்டதாகவும், மேலும் ரூபாய் 50,000 தர வேண்டுமென கூறியதாகவும் அதற்கு லட்சுமணன் குடும்பத்தார் ஏற்கனவே ரூபாய் 50,000 தந்தமையால் மீண்டும் பணம் தர இயலாது என கூறியதாக தெரிய வருகிறது.
இதனையடுத்து வழக்கறிஞர் யோகேஸ்வரன் மிரட்டல் விடுத்ததால் மன உளைச்சலுக்கு உள்ளான லட்சுமணன் ரயிலின் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என எழும்பூர் ரயில்வே போலீசார் தெரிவிக்கின்றனர்.
உண்மையில் வழக்கறிஞர் யோகேஸ்வரன் பணம் கேட்டு மிரட்டியதால் லட்சுமணன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என அப்பகுதி மக்கள் சந்தேகிக்கின்றனர்.