சென்னை குரோம்பேட்டை அடுத்த ராதா நகர்ப்பகுதியில் இளைஞர் ஒருவர் மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்யப்போவதாகச்சொல்லி மிரட்டல் விடுத்து வருவதாக அப்பகுதி காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து, உடனடியாக மின் வாரியத்திற்குத் தகவல் தெரிவித்து மின் இணைப்பைத் துண்டித்தனர். மேலும் தீயணைப்பு மற்றும் மீட்புத்துறையினர் உதவியுடன் அப்பகுதிக்கு காவல் துறையினர் விரைந்தனர்.
ராதா நகரைச் சேர்ந்தவர் தான், கிஷோர் (19). பெயிண்டிங் வேலை செய்து வரும் இவர் தான் இன்று காலை 8 மணியளவில், அவர் வீட்டின் அருகேயுள்ள மின்கம்பத்தில் ஏறி தற்கொலை செய்துகொள்ளப்போவதாக மிரட்டியுள்ளார். மேலும், இவர் அதே பகுதியைச்சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவியை இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
![காதலி திருமணத்திற்கு சம்மதிக்காததால் மின் கோபுரத்தில் ஏறி வாலிபர் தற்கொலை முயற்சி](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/tn-che-02-threatenedtoclimbapowertowerandcommitsuicide-visual-script-7208368_15072022124802_1507f_1657869482_1020.jpg)
இந்நிலையில், தன்னைத்திருமணம் செய்யும்படி அந்தப் பெண்ணிடம் கூறியதாகவும் அதற்கு அவர் மறுப்புத் தெரிவித்ததால் இன்று(ஜூலை 15) காலை 8 மணி அளவில் வீட்டின் அருகே உள்ள 50 அடி உயரம் கொண்ட உயர்மின் அழுத்த கோபுரத்தின் மீது ஏறி தன் காதலியைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று தற்கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர் இரண்டு மணி நேரம் பெற்றோர்களை வைத்து பேச்சு வார்த்தை நடத்தியும் கிஷோர் செவிசாய்க்காததால், அவரின் காதலியை நேரடியாக அழைத்து வந்து திருமணம் செய்வதாக உறுதி அளித்த பின்னர் கிஷோர் உயர்மின் அழுத்த கோபுரத்தில் இருந்து பத்திரமாக கீழே இறங்கினார்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியில் இரண்டு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் பொதுமக்கள் அவதியடைந்தனர். இதனைத்தொடர்ந்து காவல் நிலையம் அழைத்துச்சென்ற காவல் துறையினர் கிஷோரிடம் விசாரணை செய்து 15 நாள்கள் அவரை சிறையில் அடைக்க உள்ளனர்.