சென்னை: விமான நிலைய வளாகத்தில் விமான நிலைய ஊழியர் குடியிருப்பு உள்ளது. அங்கு விஜயகுமார் என்பவர் வசித்துவருகிறார். இவர் விமான நிலையத்தில் ஹவுஸ்கீப்பிங் பிரிவில் பணியாற்றுகிறார்.
இவரது மகன் நாகராஜ் (23), மீனம்பாக்கத்தில் உள்ள தனியார் செல்போன் ஷோ-ரூமில் பணியாற்றுகிறார்.
நாகராஜ், விமான நிலைய ஊழியர் குடியிருப்பின் மொட்டை மாடியில் நின்று செல்போன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது திடீரென மாடியிலிருந்து கீழே விழுந்து படுகாயமடைந்தார். உடனடியாக அவர் பல்லாவரத்தில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டார்.
அங்கு அவருக்குத் தீவிர மருத்துவம் அளிக்கப்பட்டது. எனினும் மருத்துவம் பலனின்றி உயிரிழந்தார். பின், நாகராஜின் உடலை அவரது தந்தை விஜயகுமார் வீட்டிற்கு எடுத்துச் சென்றார். இறுதிச் சடங்குகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுகொண்டிருந்தன.
இந்நிலையில், இதைப் பற்றி தகவல் அறிந்த சென்னை விமான நிலைய காவல் துறையினர், உடனடியாக விரைந்துவந்து நாகராஜின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்துள்ளனர். மேலும் இதைப் பற்றி விசாரணை நடத்திவருகின்றனர்.