சென்னை வேப்பேரியில் அமைந்துள்ள காவல் ஆணையர் அலுவலக மூன்றாவது வாயில் அருகே திடீரென ஒரு இளைஞர் கை மற்றும் கழுத்தில் பிளேடால் அறுத்துக்கொண்டு காயத்துடன் நுழைந்தார். உடனே பாதுகாப்பில் இருந்த காவலர்கள் அவரது கையில் வைத்திருந்த பிளேடை பறித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் பிளேடால் அறுத்துக்கொண்ட நபர் பெரும்பாக்கம் சித்தலாபாக்கத்தைச் சேர்ந்த ஆனஸ்ட் ராஜ் (29) என்பதும்; அவர் கஞ்சா போதையில் இருந்ததும் தெரியவந்தது. மேலும், ஆனஸ்ட் ராஜின் சகோதரர் ஜோதிபாசு என்பவரை, ராஜ் என்பவர் வெட்டியதாகவும், அவர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஆனஸ்ட் ராஜ் தெரிவித்தார்.
மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வரும் தனது சகோதரனை சந்திப்பதற்காக சென்றபோது காவல் துறையினர் பார்க்க அனுமதிக்கவில்லை எனவும்; பின்னர் தன்னை தாக்கி கையில் வைத்திருந்த 15 ஆயிரம் ரூபாயை காவல் துறையினர் பறித்துவிட்டுச்சென்றதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனால் பணத்தைப் பறித்து தன்னை தாக்கிய காவலர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென, காவல் ஆணையரை நேரில் சந்தித்து புகார் அளிக்க வந்துள்ளதாக அவர் தெரிவித்தார். இதனையடுத்து, ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, காயங்கள் இருக்கும் இடத்தில் பிளாஸ்டர் போட்டு ஆனஸ்ட் ராஜுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது.
ஆனால், மீண்டும் அவர் பிளாஸ்டரை பிரித்துக்கொண்டு அங்கிருந்த இருசக்கர வாகனத்தில் தலையை வைத்து மோதிக்கொண்டு நியாயம் கிடைக்க வேண்டும் என காவல் துறையினரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனையடுத்து வேப்பேரி காவல் துறையினர் ஆனஸ்ட் ராஜை பிடித்து சிகிச்சைக்காக ஆம்புலன்ஸில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க: திருமணமாகி ஆறு மாதங்களில் தற்கொலை செய்த இளம்பெண் - கணவர் கைது