சென்னை அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவி தாயுடன் அண்ணா நகர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்தார்.
சென்னை மணலியைச் சேர்ந்தவர் மகேஷ் என்பவர், இன்ஸ்டாகிராம் மூலம் மாணவி ஒருவரிடம் நட்பாகப் பழகியுள்ளார். ஒரு கட்டத்தில் மாணவியை மகேஷ் தவறான உறவுக்கு அழைக்க, அதற்கு மறுப்பு தெரிவித்து மாணவி அவருடன் பேசுவதை நிறுத்தியுள்ளார். பின்னர் கவுசல்யா என்ற பெயரில் மகேஷ் போலியான கணக்கைத் தொடங்கி மீண்டும் மாணவியிடம் நட்பாகப் பேச தொடங்கியுள்ளார்.
பெண்தான் என நினைத்து மாணவி அந்தக் கணக்கில் வழக்கம் போல நட்பாகப் பேசியுள்ளார். பெண் போலவே பேசி மாணவியின் அந்தரங்க வீடியோவை வாங்கி அதை செல்போனில் மகேஷ் பதிவு செய்துள்ளார்.
இதையடுத்து வீடியோவை வைத்துக்கொண்டு தன்னுடைய உண்மையான கணக்கு மூலம் மாணவியிடம் பேசிய மகேஷ், அவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். தன்னிடம் உள்ள வீடியோக்களை சமூக வலைதளங்களில் பரப்பிவிடுவதாகவும் அவர் மிரட்டி உறவுக்கு வர வேண்டும் என கட்டாயப்படுத்தியுள்ளார் என்று அப்புகாரில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி, இந்த விவகாரத்தை தனது தாயிடம் கூற, அவர் அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் மகேஷை போக்சோ சட்டத்தின் கீழ் கைதுசெய்து அவருடைய செல்போனையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: மனைவியை கொன்று நாடகமாடியவருக்குச் சிறை!