சென்னை: பல்லாவரம் அடுத்த திரிசூலம், வைத்தியர் தெரு விரிவு பகுதியைச் சேர்ந்தவர் முருகேசன் (29). இவரது தம்பி சத்யா (27). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் மார்ச் 21ஆம் தேதி அண்ணன், தம்பி இருவரும் ஒன்றாக மது அருந்தியுள்ளனர்.
அப்போது அண்ணன் முருகேசன் தம்பிக்கு குறைவாக மது கொடுத்ததால் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. வாய் தகராறு முற்றி, கைகலப்பாக மாறியது. இதில் இருவரும் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். இதில் ஆத்திரமடைந்த தம்பி சத்யா, வீட்டில் காய்கறிகள் வெட்ட பயன்படுத்தும் கத்தியை எடுத்து வந்து அண்ணன் முருகேசனை சரமாரியாக குத்தியுள்ளார்.
இதனைக் கண்ட அக்கம்பக்கத்தினர் முருகேசனை உடனடியாக மீட்டு, சிகிச்சைக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து தகவலறிந்த பல்லாவரம் காவல் துறையினர் சத்யாவை கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: பெண்கள் தங்களுக்கெதிரான குற்றங்களை வெளிக்கொணர வேண்டும் -மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி