சென்னை: 'பயணம் ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும்' என ஊர் சொல்லி கேட்டதுண்டு. அதே போல், 'அலைவார் அவர் எல்லாம் தொலைவர் எனும் வசனம் தவறு, அலைவார் அவர் தானே அடைவார், அவர் அடையும் புதையல் பெரிது' என்னும் வரிகளை பாடல்களிலும் கேட்டதுண்டு.
அதற்கேற்ப பெங்களூரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தன்னை யார் கேலி செய்தாலும் சரி, மக்களின் மனதைப் புரிந்துகொள்ள வேண்டும் என்னும் நோக்கில் இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணப்பட்டு வருகிறார்.
யார் இந்த இளைஞன்?
பெங்களூரு தசராஹள்ளி பகுதியைச் சேர்ந்த 26 வயதான சாய் தேஜா என்ற இளைஞர் டிப்ளமோ முடித்துவிட்டு, தனியார் ஃபுட் டெலிவரி ஊழியராகப் பணிபுரிந்து வந்தார். மேலும் இவர் யூ-ட்யூப் சேனல் ஒன்றையும் நடத்தி வருகிறார்.
இவர் உணவு டெலிவரி செய்யும் போது, தான் சந்தித்த பல்வேறு வகையான மனிதர்கள், அவர்களின் குணங்கள் தனக்கு ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தியதாக சாய் தேஜா கூறுகிறார்.
மேலும் மனிதர்களிடையே மனிதாபிமானம் மற்றும் உதவி செய்யும் எண்ணம் இன்னமும் இருக்கிறதா என்ற எண்ணம் தோன்றியதால், இந்தியா முழுவதும் சைக்கிளிங் செல்ல சாய் தேஜா திட்டமிட்டுள்ளார்.
இதற்காக அவர் கடினமாக உழைத்து சேர்த்து வைத்த 30 ஆயிரம் ரூபாயில் 10 ஆயிரம் ரூபாய்க்கு சைக்கிளும், 10 ஆயிரம் ரூபாய்க்கு சமையல் செய்யும் உபகரணங்களையும் வாங்கியுள்ளார். பின்னர் கடந்த அக்டோபர் மாதம் 2ஆம் தேதி தனது பயணத்தைத் தொடங்கினார், சாய் தேஜா.
புதிய அனுபவம்
இவர் சுமார் 55 நாள்களில் கொடைக்கானல், கோயம்புத்தூர், திருச்சி, மதுரை, கன்னியாகுமரி, சிவகங்கை உட்பட 2600 கிலோ மீட்டர் வரை பயணித்துள்ளார். மேலும் தமிழ்நாடில் அவர் மேற்கொண்டப் பயணம் அவருக்கு மிக சிறந்த அனுபவத்தை தந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
14 மாதங்களில் சைக்கிள் மூலமாக இந்தியாவைச் சுற்றி முடிக்க நினைத்த அவர், தமிழ்நாட்டைச் சுற்றவே 55 நாள்களானதால், இந்தியாவைச் சுற்ற மேலும் நான்கு மாதம் கூடுதலாகத் தேவைப்படும் எனத் தெரிவித்தார். ஊர் சுற்றும் சாய் தேஜா, இரவு நேரங்களில் கோயில், பெட்ரோல் நிரப்பும் நிலையம், திருமண மண்டபம் ஆகிய இடங்களில் தங்கி, தானே உணவு சமைத்து சாப்பிடுவதாகக் கூறுகிறார்.
பயணத்திற்குப் பணம் கட்டாயம் தேவை என்பதால், மொத்தமாக முகக்கவசங்களை மொத்தமாக வாங்கி, அதனை வழியில் ஐந்து ரூபாய்க்கு விற்பனை செய்து வருவதாகவும், மேலும் பயணம் மேற்கொள்வதை வீடியோவாகப் பதிவு செய்து அதனை யூ-ட்யூபில் அப்லோடு செய்தும், அதன் மூலம் கிடைக்கும் வருமானம் மூலம் சமாளித்து வருவதாக சாய் தேஜா கூறுகிறார்.
மனிதாபிமானம் இன்னும் உள்ளதா..?
இதனிடையே பூம்புகார் சென்ற போது, தனது சைக்கிளின் செயின் அறுந்து விட்டதாகவும், கையில் பணமில்லாமல் தவித்த போது அவ்வழியாக சென்ற முதியவர், தன்னிடம் விசாரித்து மனிதாபிமானத்துடன் 1200 ரூபாய் கொடுத்துவிட்டுச் சென்றதாகவும் கூறிய சாய் தேஜா, தமிழ்நாட்டில் பொதுமக்களிடம் மனிதாபிமானம் அதிகமாக இருப்பதை உணர்ந்ததாகக் கூறினார்.
தனது பயணத்தின் நோக்கத்தினை அறிந்த உற்றார் உறவினர்கள், தன்னை கேலி செய்த போதும், தனது லட்சியத்தை மாற்றிக் கொள்ளவில்லை என்று நம்பிக்கை பொங்க கூறுகிறார், சாய் தேஜா.
மேலும் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு சைக்கிளிங் செல்லும் வீடியோவை யூ-ட்யூப்பில் பார்த்து வியந்ததாகவும், அவரை சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் டிஜிபி அலுவலகத்திற்கு வந்ததாகவும், முறையான அனுமதி இல்லாததால் தன்னை காவலர்கள் அனுமதிக்கவில்லை எனவும் அவர் வருத்தம் தெரிவித்தார்.
மனிதாபிமானத்தைத் தேடி தனது சுற்றுப்பயணத்தை தொடங்கி, சைக்கிளில் அலையும் இந்த சாய்தேஜா தனது புதையலை அடைவாரா, தேடல் வெற்றிப்பெறுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படிங்க: Besant nagar beach: ஒரே நாளில் 75 டன் திடக்கழிவுகள் அகற்றம்