சென்னை: மதுரை மாவட்டம் மேலூரைச் சேர்ந்தவர் அழகர் ராஜா (30). இவர் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு, அதே பகுதியில் உள்ள ஒரு இளம் பெண்ணிடம் பழகி வந்ததாக கூறப்படுகிறது. அதன் பின்பு அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் ஏற்பட்ட நிலையில் இளம் பெண்ணுக்கு கொலை மிரட்டல் விடுத்ததோடு, அடித்து காயப்படுத்தியுள்ளார்.
இதையடுத்து அந்த இளம்பெண் கொட்டாம்பட்டி காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், அழகு ராஜாவை கைது செய்ய தேடி வந்தனர். ஆனால், இவர் வெளிநாட்டுக்கு தப்பியோடி தலைமறைவாகிவிட்டார்.
இதையடுத்து அழகு ராஜாவை தேடப்படும் தலைமறைவு குற்றவாளியாக காவல் துறையினர் அறிவித்தனர். அதோடு அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும்எல் ஓசி போட்டு வைத்திருந்தார். இந்நிலையில், சிங்கப்பூரில் இருந்து இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது.
அந்த விமானத்தில் வந்த பயணிகளின் பாஸ்போர்ட் மற்றும் ஆவணங்களை சென்னை விமான நிலைய குடியுரிமை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அதே விமானத்தில் கடந்த 4 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த அழகு ராஜாவும் சென்னைக்கு திரும்பி வந்தார்.
குடியுறிமை அதிகாரிகள், அழகு ராஜாவின் பாஸ்போா்ட்டை கம்ப்யூட்டர் மூலம் ஆய்வு செய்தனர். அப்போது அவர் மதுரை மாவட்ட காவல் துறையினரால் கடந்த 4 ஆண்டுகளாக தேடப்படும் தலைமறைவு குற்றவாளி என்பது தெரியவந்தது. இதையடுத்து அழகு ராஜாவை வெளியில் விடாமல் குடியுறிமை அதிகாரிகள் ஒரு அறையில் வைத்து அடைத்தனர்.
பின்னர் இது குறித்து உடனடியாக மதுரை மாவட்ட காவல் எஸ்பி-க்கு தகவல் கொடுத்தனர். அழகு ராஜாவை கைது செய்து அழைத்துச் செல்ல தனிப்படை காவல் துறையினர் சென்னை விமான நிலையம் வந்து கொண்டிருக்கின்றனர். நான்கு ஆண்டுகளாக சிங்கப்பூரில் தலைமறைவாக இருந்த மதுரையைச் சேர்ந்த தேடப்படும் குற்றவாளி சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: மூதாட்டி மீது கார் ஏற்றிவிட்டு நாடகமாடிய பயிற்சி மருத்துவர் கைது