சென்னை: பூவிருந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரையிலுள்ள தனியார் தங்கும் விடுதியில் சந்தேகத்திற்கிடமான முறையில் வடமாநிலத்தவர் தங்கி வருவதாக அமைந்தகரை காவல் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
விலையுயர்ந்த செல்போன் கண்டுபிடிப்பு
இதையடுத்து விடுதிக்குச் சென்று காவல் துறையினர், அந்நபரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர் உத்தரப் பிரதேசம் மாநிலத்தைச் சேர்ந்த பர்மன் கான் (24) என்பது தெரியவந்தது. இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் விலையுயர்ந்த செல்போன், ஸ்மார்ட் வாட்ச், செல்போன் உதிரிபாகங்கள் ஆகியவை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
இது குறித்த ஆவணங்கள் கேட்டு விசாரணை நடத்தியபோது பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. பர்மன் கான், ஏஜெண்ட் மூலமாக துபாய்க்குச் சென்று என்பிராய்டரி பணியில் ஈடுபட்டு வந்துள்ளார். பின்னர், கரோனா காரணமாக வேலை இழந்ததால் கையில் பணமில்லாமல் இந்தியா திரும்ப முடியாமல் தவித்து வந்துள்ளார்.
நிபந்தனைக்கு ஒப்புக்கொண்ட பர்மன் கான்
அப்போது, அங்கு பழக்கமான நபர் ஒருவர் இந்தியாவிற்கு தான் இலவசமாக விமான டிக்கெட் போட்டு தருவதாக பர்மன் கானிடம் கூறியுள்ளார். ஆனால், தான் கொடுக்கும் பையை ஹைதராபாத்திலுள்ள ஒருவரிடம் ஒப்படைக்க வேண்டும் என நிபந்தனை வைத்தார்.
தான் கொடுக்கும் தொப்பி, ஷுவை அணிந்து கொண்டு சென்றால் போதும் அவர்களே பையை ஹைதராபாத்தில் வாங்கி கொள்வார்கள் எனத் தெரிவித்துள்ளார். வேறு வழியின்றி இதற்கு பர்மன் கான் ஒப்புக்கொண்டார்.
சுங்கத் துறையிடம் ஒப்படைப்பு
இதனையடுத்து பர்மன் கான் விமானம் மூலமாக துபாயிலிருந்து சென்னைக்கு வந்து அமைந்தகரையில் அறை எடுத்து தங்கியுள்ளார். அப்போது சந்தேகத்திற்கிடமான முறையில் நடந்து கொண்டதால் விடுதி உரிமையாளர் காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தது தெரியவந்தது.
இதனையடுத்து முறையான ஆவணமில்லததால் செல்போன்கள், ஸ்மார்ட் வாட்ச் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர், பர்மன் கானை சுங்கத்துறை அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். இது குறித்து சுங்கதுறை அலுவலர்கள் பர்மன் கானிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஏர்இந்தியா விமானத்தின் கழிவறைத் தொட்டிக்குள் கிடந்த 408 கிராம் தங்க நகைகள்!