சென்னை சைதாப்பேட்டையைச் சேர்ந்த கல்லூரி மாணவியின் செல்ஃபோன் எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தகாத முறையில் குறுஞ்செய்திகள் அனுப்பியதாக கூறி மாணவியின் தந்தை அடையாறு சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்தார்.
அப்புகாரில், தனது மகளின் செல்ஃபோன் எண்ணிற்கு தகாத முறையில் குறுஞ்செய்திகள் அனுப்பியும், தோழிகளின் செல்ஃபோன் எண்ணை கேட்டும் தொடர்ச்சியாக அடையாளம் தெரியாத நபர் ஒருவர் தொந்தரவு செய்து வருகிறார். மேலும், செல்ஃபோன் எண் தரவில்லை என்றால், மார்பிங் செய்யப்பட்ட தனது மகளின் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டு விடுவதாகவும் மிரட்டல் வருவதாக தெரிவித்தார்.
இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், கல்லூரி மாணவிக்கு அழைப்பு விடுத்த செல்ஃபோன் எண்ணை டிரேஸ் செய்தபோது அது தண்டையார்பேட்டை முத்தமிழ் நகரைச் சேர்ந்த அருண் கிறிஸ்டோபர் (25) என்பவரது செல்ஃபோன் எண் என்பது தெரியவந்தது. மேலும், இவர் தான் மாணவிக்கு மிரட்டல் விடுத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, அவரை கைது செய்த காவல் துறையினர், அவரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், அவர் பொறியியல் படித்துவிட்டு தற்காலிகமாக மின்வாரிய துறையில் பணிபுரிந்து வருவது தெரியவந்தது. இதனையடுத்து அருண் கிறிஸ்டோபர் மற்றும் கல்லூரி மாணவியை ஆகிய இருவரையும் காவல் நிலையம் அழைத்த காவல் துறையினர், அவர்களிடம் விசாரணை நடத்தினர்.
அப்போது, இருவரும் சமூக வலைதளம் மூலம் நட்பாக பழகி, பின்னர் சில மாதங்கள் காதலித்துள்ளதும் தெரியவந்தது. இவர்கள் காதலிக்கும்போது தனிமையில் பேசிக்கொண்ட உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்களையும் அருண் கிறிஸ்டோபர் தனது செல்ஃபோனில் பதிவு செய்து வைத்துள்ளார்.
பின்னர், கல்லூரி மாணவியின் தோழிகளை தனக்கு இன்ட்ரோ கொடுக்க வேண்டும் எனக் கூறி அவர்களின் செல்ஃபோன் எண்ணை வலுக்கட்டாயமாக கல்லூரி மாணவியின் செல்போனிலிருந்து அருண் கிறிஸ்டோபர் எடுத்துள்ளார். மேலும், கல்லூரி மாணவியின் இன்ஸ்டாகிராம் ஐடி, பாஸ்வேர்டு ஆகியவற்றை வாங்கிக்கொண்டு, அதிலிருந்து அவரின் தோழிகளுடன் நட்பாக பழகி குறுஞ்செய்திகளையும், புகைப்படங்களையும் அனுப்பி வந்துள்ளார்.
இதனால், சில தோழிகள் அந்த கல்லூரி மாணவியின் தந்தையிடம் முறையிட்டுள்ளனர். அதன் பின்பே கல்லூரி மாணவியின் தந்தைக்கு விஷயம் தெரியவர, கல்லூரி மாணவியிடம் இது குறித்து கேட்டுள்ளார். அதற்கு, மாணவி இது யாரென்று தெரியவில்லை என்றும் யாரோ தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஹேக் செய்துவிட்டதாகவும் கூறியுள்ளார். மேலும், தனது செல்ஃபோன் எண்ணிற்கு தகாத முறையில் குறுஞ்செய்திகள் வருவதாகவும் தனது தந்தையிடம் அவர் கூறியுள்ளார்.
அதன் பின்னரே அந்த கல்லூரி மாணவியின் தந்தை காவல் நிலையத்தில் புகார் கொடுத்தது தெரியவந்தது. பின்னர், அருண் கிறிஸ்டோபரை கைது செய்த காவல் துறையினர், அவரது செல்ப்மொபைல் போனை சோதனை செய்து பார்த்தபோது அதில் பல பெண்களின் புகைப்படங்கள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதைத்தொடர்ந்து, அருண் கிறிஸ்டோபரிடம் காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் கைகூடாததால் காதலன் விஷம் குடித்து தற்கொலை