சென்னை: தாம்பரம் மாநகர காவல் நிலையம் உட்பட்ட பகுதிகளில் கஞ்சா விற்பனையை முற்றிலும் ஒழிக்கும் நடவடிக்கையாக, மதுவிலக்கு ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தனிப்படை காவலர்கள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் பள்ளிக்கரணை மதுவிலக்கு ஆய்வாளர் சரவணன் தலைமையான தனிப்படையினர் பெருங்களத்தூர் பேருந்து நிலையத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்கு இடமாக பெரிய பை உடன் நின்றிருந்த ஒருவரை பிடித்து விசாரணை செய்துள்ளனர். அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் சந்தேகம் அடைந்த காவல்துறையினர் அவரின் உடமையை சோதனை செய்தபோது, அதில் 10 கிலோ கஞ்சா இருந்தது தெரியவந்தது.
பின்னர், கைது செய்து மேற்கொண்ட விசாரணையில், கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த தினேஷ் (29) எனும் இவர் யோகாசனத்தில் முதுகலை பட்டம் பெற்றவர். சென்னை பாலவாக்கத்தில் தங்கி வேளச்சேரி, நீலாங்கரை, துறைப்பாக்கம் ஆகிய பகுதிகளில் உள்ள உடற்பயிற்சி கூடத்தில் யோகாசன ஆசிரியராக பணிபுரிந்து வந்துள்ளார்.
மேலும் இவரிடம் மன அழுத்தம் மற்றும் உடல் எடையை குறைக்க வரும் ஐடி ஊழியர்களை குறி வைத்து கஞ்சா விற்பனை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது. இதையடுத்து அந்த நபரை பெருங்களத்தூர் பீர்க்கங்கரனை காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். பின்னர் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: கஞ்சா ஆயில் விற்ற இளைஞர்கள் கைது