சென்னை: சென்னை யானைக்கவுனியில் தாய், தந்தை, மகன் ஆகிய மூவர் நவம்பர் 11ஆம் தேதி சுட்டுப் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவ்வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளைப் பிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
அண்மையில், வழக்கில் தொடர்புடைய கைலாஷ், ரபீந்தரநாத், விஜய் உத்தம் ஆகிய மூவரை தமிழ்நாடு காவல் துறையினர் புனேவில் வைத்து கைதுசெய்தனர். மேலும் கொலைக்குப் பயன்படுத்திய கள்ளத்துப்பாக்கி உள்பட இரண்டு துப்பாக்கிகளைப் பறிமுதல்செய்தனர்.
பின்பு அவர்களிடம் நடத்திய விசாரணையில், தனது சகோதரிக்காகவே அந்த மூன்று கொலைகளையும் செய்ததாக குற்றவாளிகள் தெரிவித்துள்ளனர்.
தனது சகோதரி ஜெயமாலாவை ஷித்தல் என்பவருக்குத் திருமணம் முடித்துக் கொடுத்ததாகவும், ஷித்தலின் தாயார் தொடர்ச்சியாக ஜெயமாலாவை துன்புறுத்தி வந்ததாலும், ஜெயமாலாவின் கணவரான ஷித்தல், அவரது தாய், தந்தை ஆகிய மூவரையும் திட்டம் தீட்டி கொலை செய்தோம் என குற்றவாளிகளில் ஒருவரான கைலாஷ் வாக்குமூலம் அளித்துள்ளார்.
ஒன்றரை மாதத்திற்கு முன்பு சென்னை காட்டூரில் தங்கியிருந்து துப்பாக்கி சுட பயிற்சி எடுத்ததாக வாக்குமூலத்தில் தெரிவித்த அவர், சகோதரி ஜெயமாலா அதிக கொடுமைக்கு உள்ளானதால் அவர் கண்முன்னே இந்தக் கொலையை அரங்கேற்றியதாகவும் கூறியுள்ளார்.
கள்ளத்துப்பாக்கியை கைலாஷ் வாங்கியது எங்கே? சென்னையில் யாருடன் கைலாஷ் தொடர்புவைத்துள்ளார் என்பது குறித்து விசாரிக்க கைதுசெய்யப்பட்ட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க காவல் துறையினர் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மேலும், கொலையில் தொடர்புடைய ஜெயமாலா, விலாஸ், ராஜீ சிண்டே ஆகிய மூவரையும் வலைவீசித் தேடிவருகின்றனர்.
இதையும் படிங்க: செளகார்பேட்டை கொலை வழக்கு - மூன்று பேர் கைது!